சிறிலங்கா கடற்படைக்கு கொடையாக வழங்கப்பட்ட, அமெரிக்க கடலோரக் காவல்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பலான யுஎஸ்சிஜிசி ஷேர்மன் (USCGC Sherman) நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
அமெரிக்க கடலோரக் காவல்படையில் இருந்து நீக்கப்பட்ட யுஎஸ்சிஜிசி ஷேர்மன் கப்பல், சிறிலங்கா கடற்படையின் பாவனைக்காக வழங்கப்பட்டது.
மறுசீரமைப்புச் செய்யப்பட்டு வழங்கப்பட்ட இந்தப் போர்க்கப்பல் அமெரிக்காவில் சிறிலங்கா கடற்படையினால் கடந்த ஆண்டு பொறுப்பேற்கப்பட்டது.
இந்தக் கப்பலைக் கையாளும் தொழில்நுட்ப பயிற்சிகளை முடித்துக் கொண்டு சிறிலங்கா கடற்படையினர் அதனை நேற்று கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர்.
கப்டன் றோகித அபேசிங்கவின் தலைமையில் 22 அதிகாரிகள் மற்றும் 111 கடற்படையினருடன், இந்தக் கப்பல் நேற்றுக் காலை கொழும்புத் துறைமுகத்துக்கு வந்த போது, சிறிலங்கா கடற்படைக் கப்பல்கள், அதன் மீது நீரைப் பாய்ச்சியும், பாரம்பரிய வாத்திய முழக்கங்களுடனும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா உள்ளிட்ட கடற்படை உயர் அதிகாரிகள் இந்த வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்தப் போர்க்கப்பலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன விரைவில் கட்டளையிட்டு இயக்கி வைப்பார்.
115 மீற்றர் நீளம் கொண்ட இந்தப் போர்க்கப்பல் அதிநவீன போராயுதங்களையும், கண்காணிப்புக் கருவிகளையும் கொண்டுள்ளது.
இதுவே சிறிலங்கா கடற்படையில் இணைந்து கொள்ளும் மிகப் பெரிய போர்க்கப்பலாகும்.
இது ஆழ்கடல் கண்காணிப்பு, ரோந்து, மீட்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.
0 comments:
Post a Comment