பயங்கரவாதிகளால் மறைத்து வைக்கப்பட்டுள்ள எந்தவொரு ஆயுதங்களையோ, வெடிபொருட்களையோ கண்டுபிடிக்காமல் விட்டுவைக்கப் போவதில்லையென பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர உறுதியளித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் நேற்று (10) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அத்துடன், பயங்கரவாத குழுவுடன் தொடர்பு வைத்துள்ள அனைவரையும் கைது செய்யும் அதேசமயம் அவர்களுடன் தொடர்புபட்ட சகல சொத்துக்களையும் கைப்பற்றுவோம் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதான குண்டுதாரியான சஹ்ரான் ஹாஷிமுடன் மிகவும் நெருக்கமான உறவையும், நிதிகொடுக்கல் வாங்கல்களையும் பேணி வந்த குற்றச்சாட்டில் காத்தான்குடி மெத்தப் பள்ளி வீதியில் வைத்து கைது செய்யப்பட்ட மொஹம்மட் அலியார் என்ற சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது பல்வேறு தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
60 வயதுடைய இச்சந்தேகநபர் பயங்கரவாதிகளினால் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் பயன்படுத்திவந்த பயிற்சி இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பயிற்சிகளில் பங்குபற்றியுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சஹ்ரானுடன் நிதி நடவடிக்கைகளை பேணிவந்தவர்கள், அவர்கள் பயன்படுத்தி வந்த பல்வேறு வங்கிக் கணக்குகள் தொடர்பிலும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
காத்தான்குடி மற்றும் மருதானை பிரதேசங்களில் கைது செய்யப்பட்ட இரு முக்கிய சந்தேக நபர்களும் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு பொலிஸாரினால் பல்வேறு கோணங்களில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் குற்றப் புலனாய்வு மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில், நாளுக்கு நாள் முன்னேற்றம் காணப்படுவதுடன் இந் நபர்களிடமிருந்து பல்வேறு தகவல்கள் கிடைத்த வண்ணமுள்ளது என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment