ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்குமா?

ரான், வல்லரசு நாடுகளுடன் 2015-ம் ஆண்டு அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது. வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் என கருதப்பட்ட அந்த ஒப்பந்தம், ஈரான் அணு ஆயுத செயல்பாடுகளை கட்டுக்குள் கொண்டு வரவும், அதற்கு ஏற்ப அந்த நாட்டின் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளை திரும்பப் பெறவும் வழிவகுக்கிறது.



ஒபாமா காலத்தில் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம், அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டிரம்புக்கு பிடிக்கவில்லை. இதில் அமெரிக்க நலன் கருத்தில் கொள்ளப்படவில்லை என்பது அவரது கருத்து.

இதன் காரணமாக கடந்த ஆண்டு திடீரென இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.

இது அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பிரச்சினையை ஏற்படுத்தியது. ஈரான் படையை கருப்பு பட்டியலில் அமெரிக்கா சேர்த்தது.

அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகள் ஈரானின் பொருளாதாரத்தை பின்னுக்கு செல்ல வைத்தது. இதுவரை இல்லாத வகையில் ஈரான் நாணய மதிப்பு சரிவை சந்தித்தது. இதனால் வெளிநாட்டு முதலீடுகள் பாதித்தன.

ஈரானை புதிய ஒப்பந்தம் போட வைக்க வேண்டும், அந்த ஒப்பந்தம் அணு ஆயுதங்கள் மட்டுமின்றி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் கட்டுப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்று அமெரிக்கா கணக்கு போடுகிறது.

ஈரானும் மிரட்டல் விடுத்து வருகிறது. குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தியில் தடையை ஏற்படுத்தி விடுவோம் என்கிறது. இது உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு பெரும் தடைச்சுவராக அமைந்து விடும்.

இந்த நிலையில் ஈரான் மீது கண் வைத்து அமெரிக்கா போர்க்கப்பல்களையும், போர் விமானங்களையும், தளவாடங்களையும் நகர்த்துகிறது.

பேட்ரியாட் ஏவுகணை அமைப்பை மத்திய கிழக்கு பகுதிக்கு அமெரிக்கா அனுப்புகிறது. ஏற்கனவே இந்தப் பகுதியில் அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் தொகுதி உள்ளது. அதில் சேரும் வகையில் யு.எஸ்.எஸ். ஆர்லிங்டன் விமானம் தாங்கி போர்கப்பலையும் அனுப்புகிறது.

கத்தார் தளத்துக்கு அமெரிக்காவின் பி-52 ரக போர் விமானங்கள் போய்ச் சேர்ந்து விட்டன.

ஈரான் மூலம் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க வீரர்களுக்கு ஆபத்து நேரலாம் என்ற எதிர்பார்ப்பில்தான் போர்க்கப்பல்கள், போர் விமானங்கள், தளவாடங்களை அனுப்பி வைப்பதாக அமெரிக்கா கூறுகிறது.

ஆனால் இதை ஈரான் நிராகரித்து உள்ளது. இது முட்டாள்தனமான செயல் என ஈரான் விமர்சித்துள்ளது.

ஈராக்கில் மட்டும் அமெரிக்காவின் 5 ஆயிரத்து 200 படை வீரர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கு பகுதிக்கு அமெரிக்கா போர்க்கப்பல்களையும், போர் விமானங்களையும், தளவாடங்களையும் அனுப்பி வைப்பது, அந்த நாடு ஈரானுடன் போர் தொடுப்பதற்கான முன் ஏற்பாடா என்ற கேள்வி சர்வதேச அரசில் எழுந்துள்ளது.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment