இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிறுபான்மை இன மக்களைக் குறிவைத்து அடக்குமுறைகள் தொடர்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு அவற்றை உடனடியாக சர்வதேச சமூகம் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கான அவுஸ்ரேலியத் தூதுவராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள டேவிட் ஹொலிவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையே நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பு தொடர்பாக கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது இலங்கையில் சிறுபான்மை இன மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம், தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகள் மற்றும் இலங்கை விவகாரத்தில் அவுஸ்ரேலியாவின் பங்களிப்பு தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் சிறுபான்மை இன மக்களைக் குறிவைத்து கைதுகள், சோதனைகள், கெடுபிடிகள் மற்றும் வன்முறைகள் தொடர்கின்றன என்றும் அவசரகாலச் சட்டத்தால் தமிழ் மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர் என்றும் இதன்போது தான் தெரிவித்ததாகவும் கூட்டமைப்பின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்த அடக்குமுறைகளை சர்வதேச சமூகம் உடன் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதோடு அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதற்கு இடமளிக்கக்கூடாது என தான் இலங்கைக்கான அவுஸ்ரேலியத் தூதுவரிடம் கோரிக்கை விடுத்ததாகவும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment