உயர்நீதிமன்றின் வகிபாகத்துக்கு மீறிய செயற்பாடுகளை மேற்கொள்வதற்காகவே, இலங்கை குண்டுத் தாக்குதல் விவகாரம் குறித்து நாடாளுமன்ற தெரிவுக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக குறித்த குழுவின் உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்தார்.
நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற தெரிவுக் குழுவின் முதல் அமர்வில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை சுட்டிக்காட்டினார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாம் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் அரசியல்வாதிகளாகவும் இருந்தாலும் இந்தத் தெரிவுக்குழுவின் எமது கடமைகளை நிறைவேற்றும்போது அனைத்துக்கும் அப்பால் செயற்படவேண்டிய தேவை உள்ளது.
இந்தத் தெரிவுக்குழுவானது நீதிமன்றமல்ல. நீதிமன்றில், சட்டம் மீறப்பட்டுள்ளதா மற்றும் சட்டத்தை மீறிய குறித்த நபர் தொடர்பில் சாட்சிகளை ஆராய்ந்து அவர் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்றே தீர்ப்பு வழங்கப்படும். ஆனால், இது எமது செயற்பாடு அல்ல. நீதிமன்றினால் முடியாத சில விடயங்களும் இருக்கின்றன.
அந்தவகையில், இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் புலனாய்வுத் துறையினரின் அறிவித்தல்களை உரிய வகையில் கிடைத்தனவா, அவை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டதா, எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் குறைப்பாடுகள் உள்ளனவா, எதிர்காலத்தில் எவ்வாறான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பல்வேறு கேள்விகள் இந்த விடயத்தில் உள்ளன.
இவற்றை ஆராய வேண்டியது நீதிமன்றமொன்றின் கடமையல்ல. இதனாலேயே, இதுவிடயம் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க விசேட தெரிவுக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இங்கு, சாட்சிகளை விசாரணை செய்வதை பார்வையிட மட்டும்தான் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதே ஒழிய, தெரிவுக்குழுவின் கூட்டங்களை பார்வையிடுவதற்கு அல்ல என்பதையும் இங்குக் கூறிக்கொள்கிறேன்” என மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment