சோதனைகள் அளவுக்கதிகமாகி மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தக்கூடாது - டக்ளஸ்

சோதனைகள் என்ற பெயரில் நாட்டில் அனர்த்தங்கள் இடம்பெற்ற ஏனைய பகுதிகளைவிட வடக்கு நோக்கியதான பகுதிகளிலேயே ஏற்பாடுகள் அதிகமாகி இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. சோதனை நடவடிக்கைகள் நாட்டின் தற்போதைய நிலையில் தேவை என்கின்ற போதிலும், அது அளவுக்கு அதிகமாகி, மக்களுக்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தவதாக அமைந்து விடக் கூடாது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான கட்டளை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்
கடந்த காலங்களில் தங்களது சுயலாப பாசாங்கு அரசியலுக்காக வடக்கின் தமிழ்த் தரப்பு அரசியல்வாதிகள் ஆடிக் கொண்டு வந்திருந்த குத்தாட்டங்கள் காரணமாக அதிருப்தி கொண்ட நிலையில், பாதுகாப்புத் தரப்பினர் அந்த அதிருப்தியினை தங்கள் மீது காட்டுவதாகவே எமது மக்கள் அங்கலாய்த்து வருவதையும் நான் இந்தச் சந்தர்ப்பத்திலே குறிப்பிட வேண்டியுள்ளது.
எனவே, இது குறித்து அரசு அவதானத்தில் எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றேன். மக்கள் பாதுகாப்பு என்ற பெயரில், தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை காட்டக் கூடிய சந்தர்ப்பமாக இன்றைய சூழ்நிலையை எவரும் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதில் அரசாங்கம் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்.
அதேநேரம், அப்பாவி மக்கள் எவராயினும் அம் மக்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாகப் பாதிக்கப்படக் கூடாது என்பதையே நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்திருக்கின்றோம். குறிப்பாக, முஸ்லிம் மக்களில் பலரும், பல்வேறு பகுதிகளிலிருந்து கைது செய்யப்பட்டு வருவதாகவே அன்றாட ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன. இத்தகைய கைதுகளின்போது, பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்பில்லாத அப்பாவி மக்கள் கைது செய்யப்பட்டிருந்தால், - அவர்களிடம் மேற்கொள்கின்ற விசாரணைகளின் பின்னர் அவர்கள் அப்பாவிகள் எனத் தெரியவரும் நிலையில் அவர்களை விடுதலை செய்வதற்கு உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டிய அதேநேரம், அத்தகைய அப்பாவிகளை கைது செய்வதிலிருந்தும் தவிர்ந்துக் கொள்ள வழிவகைளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், கடந்த தற்கொலைத் தாக்குதலுக்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்டிருந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலும் சிங்கள மக்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றே தெரிய வருகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் அப்பாவிகளும் அடங்குகின்றனர் என பலதரப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பிலும் அவதானமெடுத்து, உண்மையிலேயே வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்பில்லாதவர்களை விடுவிப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
நலிந்து போன மக்களின் நாளாந்த அவலங்கள் குறித்து தமிழ் கட்சி தலைமைகளில் பலருக்கும் அக்கறை இல்லாமால் இருக்கலாம். யாருக்கும் இல்லாத அக்கறை எனக்கு மட்டும் இருப்பது ஏன் என்று கேட்பீர்கள்!. அன்று எரிந்து போன எம் தேசத்தில் நலிந்து போன எமது மக்களுடன் கூடவே வாழ்ந்தவன் நான். அழிவு யுத்தத்தின் போது வலிகளையும் வதைகளையும் சுமந்த எமது மக்களின் அவலங்களை துடைத்த அனுபவங்களால், நானே அந்த பாதிப்புகளின் வலிகளை உணர்ந்த வரலாறு எனக்கு உண்டு.
இனியுமொரு வன்முறையும் அதன் வலிகளும் எமது மக்களை வந்து சூழும் கொடுமைகளை நாம் சகித்துக்கொண்டிருக்க முடியாது. போராட்டம் வெடிக்கும் என்று சும்மா போலியாக உசுப்பேற்றி சூளுரைக்கும் சுயலாப பல தமிழ் அரசியல்வாதிகளுக்கு உயிர்த்த ஞாயிறு வன்முறைகள் நிச்சயமாக இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும். குண்டு வெடிப்புகள் நடந்த குருதியின் ஈரம் காயுமுன்னரே அவர்கள் விடுத்த அறிக்கையில் நடந்த வன்முறைகளால் அரசியல் தீர்வு முயற்சிகள் பாதிப்படைந்து விட்டன என்றும், அரசியல் தீர்வை பேரம் பேசி பெற முடிந்த போதிய அரசியல் பலம் அவர்களிடம் இருந்தும், அதை எமது மக்களுக்கு பெற்றுக்கொடுக்காத அவர்களின் குற்றமா?. அல்லது, அதனோடு சம்பந்தமே இல்லாத குண்டு வெடிப்புகளின் சூத்திரதாரிகளின் குற்றமா?... படையினரை வெளியேற்றியே தீருவோம் எனச் சூழுரைத்து தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வழங்கினார்கள். அது அவர்களின் குற்றமா?.. அல்லது குண்டு வெடிப்புகள் நடந்தவுடன் படையினர் எம் மண்ணில் இருந்து வெளியேறக்கூடாது என்று அவர்களே கூறி வரும் அவர்களது சந்தர்ப்பவாத அரசியல் தனத்தின் குற்றமா?
சொந்த மக்களின் பெயரை சொல்லி சுயலாப அரசியல் நடத்துவோர் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வழங்குவார்கள். அரசியல் தீர்வை பெற்று தருவோம்,. படையினரை வெளியேற்றுவோம் அது செய்வோம். இது செய்வோம் என்று, தம்மால் அவைகள் முடியாததைக் கூறி அம்பலப்பட்டவுடன் அதற்கான போலி நியாயங்களை அவர்கள் தேடிக்கொண்டிருப்பார்கள். உயிர்த்த ஞாயிறு வன்முறைகள், தமிழரின் உரிமைகளை பெற்றுத்தருவோம் என கூச்சலிடுவோருக்குத் தப்பித்து கொள்ளும் காரணங்களில் ஒன்றாகவே அமைந்து விட்டது. கடந்த ஏப்பரல் 21ஆம் திகதி தற்கொலைத் தாக்குதலின் பின்னரான பல்துறை சார்ந்த வீழ்ச்சி நிலையின் காரணத்தால், வாழ்வாதாரங்கள் இழந்து தவிக்கின்ற அனைத்து மக்களினதும் பாதிப்புகள் தொடர்பில் ஆராய்வதற்கென உடனடியாக ஓர் அவசரகால பணியகம் அமைக்கப்பட வேண்டும் என்றார்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment