சாவகச்சேரி பொதுச்சந்தையை குத்தகைக்கு விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சந்தை வியாபாரிகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
சாவகச்சேரி சந்தையை தனியாருக்கு குத்தகைக்கு விட சாவகச்சேரி நகர சபை தீர்மானித்து, அதற்கான கேள்வி மனு கோரலையும் விடுத்துள்ளது.
இந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சந்தை வியாபாரிகள் இன்று இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
சந்தை குத்தகைக்கு விடப்படுமானால், வியாபாரிகள் மாத்திரமின்றி நுகர்வோரும் பாதிக்கப்படுவார்கள் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே தனியாருக்கு குத்தகைக்கு விடும் திட்டத்தை நகர சபை கைவிட வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் ஆகியோரின் வாகனங்களை பாதுகாக்கும் விதமாக வாகன பாதுகாப்பு தரிப்பிடம் அமைக்கப்பட வேண்டும் என்றும் உழவர் சந்தையை மாற்றியமைக்கவேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாவகச்சேரிச் சந்தையை தனியாருக்கு குத்தகைக்கு வழங்க வேண்டுமென கடந்த ஒக்டோபர் மாதம் முதல் சபையில் உறுப்பினர்கள் கோரி வந்துள்ளனர். அவ்விடயத்தை தவிசாளர் கவனத்தில்கொள்ளவில்லை.
இருப்பினும் கடந்த 16ஆம் திகதி நடைபெற்ற அமர்வில் உறுப்பினர்கள் அனைவரும் கடுமையாக வலியுறுத்தியமையால், சந்தையை குத்தகைக்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் ஆகியோரின் நலன்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நிபந்தனைகள் தயாரிக்கப்பட்டு, எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் சந்தையை தனியாருக்கு குத்தகைக்கு விடுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment