யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்ட அகதிகள் குடும்பம், மீண்டும் வவுனியாவிற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
வவுனியாவில் தங்க வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு அகதிகளில் ஒரு பகுதியினரை யாழ்ப்பாணத்தில் தங்க வைப்பதற்கு பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் மேற்கொண்ட நடவடிக்கையை வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தலையிட்டு நிறுத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீர்கொழும்பில் தங்கியிருந்த வெளிநாட்டு அகதிகளிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டதையடுத்து, அவர்களை வடக்கில் தங்க வைக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.
அதற்கமைய வவுனியா கூட்டுறவு பயிற்சி கல்லூரியில் ஒரு தொகை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் யாழ்ப்பாணத்திலும் ஒரு தொகை அகதிகளை தங்க வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனாலும் உள்ளூரில் இதற்கு கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டது. குறித்த எதிர்ப்பையும் மீறி வவுனியாவில் அகதிகள் ஒரு பகுதியினர் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த 6 உறுப்பினர்களை கொண்ட குடும்பமொன்றை யாழ்.நகரிற்கு அழைத்து வந்து, அப்பகுதியிலுள்ள வீடொன்றில் பேராசிரியர் ரட்ணஜீவன் ஜூல் தங்க வைத்தார்.
யாழ்ப்பாணத்தில் தனியார் வீட்டில் அகதிகளை தங்க வைப்பது பாதுகாப்பு பிரச்சினைகளை ஏற்படுத்துமென்பதை யாழ்ப்பாணம் பொலிஸார் தெளிவுபடுத்த முயன்றபோதும் அகதிகளை அழைத்து வந்தவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
அதனைத் தொடர்ந்து இவ்விடயத்தை வடக்கு ஆளுநரின் கவனத்திற்கு மக்கள் கொண்டு சென்றதை அடுத்து, தனியார் வீடுகளில் அகதிகளை தங்க வைப்பது குழப்பத்தை ஏற்படுத்தும் என்ற விடயத்தை, வீட்டு உரிமையாளரை அழைத்து ஆளுநர் குறிப்பிட்டார்.
மேலும் அகதிகளை உடனடியாக வவுனியாவிற்கே அனுப்பி வைத்து விடுங்கள் என்றும் தெரிவித்துள்ளார். ஆனாலும் வீட்டு உரிமையாளர் கால அவகாசம் கோரியுள்ளார்.
ஆனால் பாதுகாப்பு விவகாரங்களில் கால அவகாசம் வழங்க முடியாதென இறுக்கமாக தெரிவித்த ஆளுநர், உடனடியாக அரசாங்கத்தின் பராமரிப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கும்படி குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்தே நேற்று இரவு ஆப்கான் அகதிக் குடும்பம் வவுனியா பூந்தோட்டம் கூட்டுறவு பயிற்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment