நோர்வே நாட்டின் ஆர்க்டிக் கடலோரப் பகுதியில் ரஷ்ய நாட்டு சேனம் பொருத்தப்பட்ட பெலுகா வகை டொல்பின் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த டொல்பினுக்கு, ரஷ்ய கடற்படை பயிற்சி அளித்திருக்கும் வாய்ப்பு உள்ளது என்று நோர்வு நாட்டு வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அந்த சேனத்தில் கோப்ரோ கேமரா தாங்கி ஒன்று இருந்ததாகவும், அதில் இருந்த அடையாளம் ரஷ்யாவைச் சேர்ந்தது என்பதைக் காட்டுவதாகவும் கடல் உயிரியலாளரான பேராசிரியர் அவுடுன் ரிகார்ட்சன் என்ற அந்த வல்லுநர் கூறியுள்ளார்.
தமது சக ரஷ்ய விஞ்ஞானி ஒருவர் அது ரஷ்யாவில் பயன்படுத்துவதைப் போன்ற கருவி அல்ல என்று கூறியதாகவும் ரிக்கார்ட்சன் கூறினார்.
ரஷ்யாவுக்கு அந்தப் பிராந்தியத்தில் கடற்படைத் தளம் ஒன்று உள்ளது.
இங்கோயா என்ற ஆர்க்டிக் தீவின் கடற்கரையிலிருந்து புறப்படும் நார்வே நாட்டுப் படகுகளை பயிற்சியளிக்கப்பட்ட அந்த டொல்பின் பல முறை அணுகியுள்ளது.
இந்த இடம், ரஷ்யாவின் வடதிசை கடற்படைத் தளம் அமைந்துள்ள முர்மான்ஸ்க் என்ற இடத்தில் இருந்து 415 கி.மீ. தொலைவில் உள்ளது.
பெலூகா திமிங்கிலத்தின் சேனம் அகற்றப்படுவதைக் காட்டும் வீடியோ ஒன்றை நார்வேயின் பொதுத்துறை ஒளிபரப்பு நிறுவனமான என்.ஆர்.கே. வெளியிட்டுள்ளது.
அந்த டொல்பினின் தலையையும், துடுப்புப் பகுதியையும் சுற்றி அந்த சேனம் இறுக்கமாக கட்டப்பட்டிருந்ததாகவும், அதில் கிளிப்புகள் இருந்ததாகவும் பேராசிரியர் ரிகார்ட்சன் தெரிவித்தார். கோப்ரோ கேமராவுக்கான தாங்கி இருந்ததாகவும், ஆனால், அதில் கேமரா இல்லை என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில், “அது போன்ற பரிசோதனைகளை தாங்கள் செய்வதில்லை என்றும், ஆனால், தங்கள் நாட்டுக் கடற்படை சில ஆண்டுகள் பெலுகா டொல்பினைப் பிடித்துப் பயிற்சி அளித்ததாகவும், அது தொடர்புடையதாக இந்த டொல்பின் இருக்கலாம் என்றும் ரஷ்ய சகா தெரிவித்தார்” என்று ரிக்கார்ட்சன் தெரிவித்தார்.
பனிப்போர் காலத்தில் அமெரிக்காவில் சிறப்புத் திட்டம் ஒன்றின்கீழ் டொல்பின்களுக்கும், கடல் சிங்கம் என்னும் விலங்குகளுக்கும் கலிபோர்னியாவில் அந்நாட்டு கடற்படை பயிற்சி அளித்தது.
அமெரிக்கக் கப்பல்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய மர்ம நபர்கள் கடலுக்கு அடியில் இருந்தால் அவர்களைக் கண்டுபிடிக்க இத்தகைய கடல்வாழ் உயிரிகள் பயன்படுத்தப்படுவதாக அமெரிக்க கடற்படை இணைய தளம் குறிப்பிடுகிறது.
0 comments:
Post a Comment