கிளிநொச்சி, செல்வாநகர் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டுக் கும்பலின் அடாவடித் தாக்குதலில் இரு குடும்பங்களைச் சேர்ந்த 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நாட்டில் அவசரகாலச் சட்டம் நடைமுறையில் உள்ளபோது வடக்கில் இத்தகைய சம்பவம் இடம்பெற்றமை மக்களிடையே அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளன.
கர்ப்பிணிப் பெண்ணொருவர் உட்பட 6 பெண்களும், 3 ஆண்களும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பட்டா ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்து வாள்களுடன் வந்த 15 இற்கும் மேற்பட்டவர்கள் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர். குறித்த வீடுகள் இரத்தத்தால் தோய்ந்தன.
அடாவடிக் கும்பலால் தற்காலிக வீடு மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. மற்றொரு மோட்டார் சைக்கிள் அடித்துச் நொருக்கப்பட்டது. இரண்டு வீடுகள் உள்ளிட்ட மேலும் பல உடைமைகள் சேதமாக்கப்பட்டன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இராணுவத்தினர் சம்பவ இடத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
வாள்வெட்டுக்கு இலக்கான குடும்பங்களில் ஒரு குடும்பவம், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தங்களுக்கு குறித்த சிலரால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என முறைப்பாடு செய்திருந்தனர் எனவும், ஆனால், பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை எனவும் குறித்த குடும்பத்தின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
0 comments:
Post a Comment