கடந்த மாதம் (ஏப்ரல்) 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகை அன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் உள்பட 8 இடங்களில் குண்டுவெடித்தது. இதில் 253 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப் பேற்றது. இலங்கையில் உள்ள தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் மூலம் ஐ.எஸ். இயக்கம் இந்த நாசகார செயலில் ஈடுபட்டது.
குண்டு வெடிப்பு குறித்து சி.ஐ.டி. போலீசார் கண்காணிப்பு கேமிரா வீடியோக்களை வைத்து தீவிர புலனாய்வு மேற் கொண்டனர். அப்போது கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளிட்ட சில இடங்களில் தற்கொலை படை பயங்கரவாதிகள் தங்கள் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்து கொடூர தாக்குதல்கள் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து தற்கொலை படை பயங்கரவாதிகளுக்கு சொந்தமான (இலங்கை பண மதிப்பில்) ரூ.700 கோடிசொத்துக்களை பறிமுதல் செய்தனர்.
வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்டவற்றில் ரொக்க பணமும் அடங்கும். இந்த தகவலை போலீஸ் செய்தி தொடர்பாளர் ருவான் குணசேகரா தெரிவித்தார். சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஏராளமான பள்ளிகள் மூடப்பட்டன. 2 வார இடைவெளிக்கு பிறகு நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் பெரும்பாலானோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. இதனால் பல வகுப்பறைகள் காலியாக கிடந்தன. தலைநகர் கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment