தேவாலயத்துக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு - 6 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினா பாசோவில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், அந்நாட்டின் வடக்குப்பகுதியில் அமைந்திருக்கும் சான்மட்டேங்கா மாகாணத்தின் டாப்லோ நகரில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று முன்தினம் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துகொண்டிருந்தனர். அப்போது சுமார் 30 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று தேவாலயத்துக்குள் நுழைந்தது.


அந்த கும்பல், பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவர்களை குறிவைத்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் தொற்றிக்கொண்டது.

மக்கள் அனைவரும் உயிரைக்காப்பாற்றிக் கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் பாதிரியார் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அதன் பின்னரும் அந்த மர்ம கும்பல் தனது வெறியாட்டத்தை தொடர்ந்தது. தேவாலயத்துக்கும், அதனை சுற்றி உள்ள கட்டிடங்களுக்கும் தீ வைத்துவிட்டு, அந்த கும்பல் தப்பி சென்றது.

இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. கடந்த 5 வாரங்களில் தேவாலயங்களை குறிவைத்து நடத்தப்பட்ட 3-வது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment