அயர்லாந்துக்கு எதிராக பெல்பாஸ்டில் நடைபெற்ற இரண்டாவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆரம்ப வீரர் மொஹம்மத் ஷாஹ்ஸாத் குவித்த சதமும், வேகப்பந்துவீச்சாளர் குல்பாதின் நய்ப் பதிவு செய்த முதலாவது 5 விக்கெட் குவியலும் ஆப்கானிஸ்தானுக்கு 126 ஓட்ட வெற்றியைக் கொடுத்தது.
இந்த வெற்றியுடன் இரு போட்டிகள் கொண்ட தொடர் 1 - 1 என்ற ஆட்டக் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. ஸ்டோர்மொன்ட் விளையாட்டரங்கில் ஞாயிறன்று நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து 72 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தது.
புதனன்று நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 305 ஓட்டங்களைக் குவித்தது.
ஆரம்ப வீரர் மொஹம்மத் ஷாஹ்ஸாத் 101 ஓட்டங்களையும் மூன்றாம் இலக்க வீரர் ரஷ்மத் ஷா 62 ஓட்டங்களையும் பெற்றதுடன் இரண்டாவது விக்கெட்டில் 150 ஓட்டங்களைப் பெற்றனர்.
தொடர்ந்து 6 விக்கெட்டில் ஜோடி சேர்ந்த ஹஷ்மத்துல்லாஹ் ஷஹிதி (47), நஜிபுல்லாஹ் ஷத்ரான் (60 ஆ.இ.) ஆகியோர் ஆறாவது விக்கெட்டில் 86 ஓட்டங்களையும் பகிர்ந்து ஆப்கானிஸ்தானின் இன்னிங்ஸை பலப்படுத்தினர்.
அயர்லாந்து பந்துவீச்சில் மார்க் அடயர் 71 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
306 ஓட்டங்கள் என்ற இக்கட்டான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து, குல்பாதின் நய்பின் பந்துவீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் 41.2 ஓவர்களில் 179 ஓட்டங்களுக்கு சுருண்டது.
துடுப்பாட்டத்தில் போல் ஸ்டேர்லிங் (50), கெறி வில்சன் (34) ஆகிய இருவரே ஓரளவு தாக்குப்பிடித்தனர்.
ஆப்கன் பந்துவீச்சில் குல்பாதின் நய்ப் 9.2 ஓவர்களில் 43 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை வீழ்த்தினார். இதுவே சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவரது அதி சிறந்த பந்துவீச்சுப் பெறுதியாகும்.
0 comments:
Post a Comment