அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தொகுதிக்குட்பட்ட வேலம்பாடி, அண்ணாநகர் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைமை தேர்தல் அதிகாரி 46 வாக்குச் சாவடிகளில் தவறு நடந்துள்ளது. எனவே மறுவாக்குப்பதிவு நடைபெற வாய்ப்பு இருக்கிறது என ஊடகங்களை அழைத்து அவரே கூறினார். ஆனால் இரவு 11 மணிக்கு மேலே அகில இந்திய தேர்தல் ஆணையம் 13 வாக்குச்சாவடிகளுக்கு மட்டும் மறுவாக்குப்பதிவு என அறிவிக்கிறது. அப்படியானால் மீதமுள்ள வாக்குச்சாவடிகளில் நடந்த தவறு என்ன ஆனது.
தேர்தல் ஆணையம் மீதான சந்தேகம் பற்றி நாங்கள் புகார் சொன்னால், தமிழக முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் தேர்தல் ஆணையத்துக்கு வக்காலத்து வாங்கி அவர்கள் செய்வது சரி என்கிறார்கள். எனவே தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் அழுத்தத்திற்கு, உத்தரவுக்கு பணிந்து தான் இதுபோன்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதனால்தான் நாங்கள் சொல்கிறோம், தலைமை தேர்தல் ஆணையரை மாற்ற வேண்டும். அல்லது சிறப்பு பார்வையாளரை நியமித்து வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த வேண்டும்.
இடைத்தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி மாற்றத்திற்கு வித்திட வாய்ப்பு இருக்கிறது. இதனால் எப்படியாவது ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்கிற அச்சத்துடன் தான் அ.தி.மு.க. உள்ளது. இதனால் 4 தொகுதிகளிலும் தில்லுமுல்லு செய்ய ஆளுங்கட்சி தயாராக இருக்கிறது. தேர்தல் முடிவு அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு எதிராகத்தான் இருக்கும். பிளஸ்-1, பிளஸ் -2 மாணவர்களுக்கு 6 பாடத்தில் இருந்து 5 பாடமாக குறைத்து, மொழிப்பாடத்தில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது உண்மையென்றால் அதிக மாணவர்கள் தமிழை புறக்கணிக்கும் நிலை ஏற்படும்.
ஆனால் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அப்படிவராது என தெரிவித்துள்ளார். அது நம்பிக்கை அளித்தாலும் கூட எந்த சூழ்நிலையிலும் தமிழ் படிப்பை மாணவர்கள் கைவிடும் வகையில் தமிழக அரசு செயல்படுத்தக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment