4 தொகுதிகளில் அனல் பறக்கும் பிரசாரம்: எடப்பாடி பழனிசாமி

ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு வருகிற 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த 4 தொகுதிகளிலும் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளிடையே 4 முனைப் போட்டி ஏற்பட்டு இருக்கிறது.

இந்த 4 தொகுதிகளிலும் தற்போது தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. தேர்தல் பிரசாரம் ஓய்வதற்கு இன்னும் 8 நாட்களே உள்ளன. இதனால் 4 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது.

4 தொகுதிகளிலும் 4 முனைப்போட்டி என்று கூறப்பட்ட போதிலும் உண்மையில் அ.தி.மு.க., தி.மு.க. இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கணிசமான அளவுக்கு வாக்குகளை பிரித்து மற்ற கட்சிகளின் வெற்றி தோல்விக்கு வழி வகுக்கும் என்று கூறப்படுகிறது.
அ.தி.மு.க. - தி.மு.க. இரு கட்சிகளும் இந்த 4 தொகுதிகளையும் கைப்பற்றி விட வேண்டும் என்று தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இந்த 4 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் அனைவரும் முற்றுகையிட்டுள்ளனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய இரு தொகுதிகளிலும் தீவிர கவனம் செலுத்தி பிரசாரம் செய்து வருகிறார்.



அதுபோல துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய இரு தொகுதிகளிலும் முற்றுகையிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் 4 தொகுதிகளிலும் கிராமம், கிராமமாக சென்று ஓட்டு வேட்டை நடத்தி வருகிறார்கள்.

இடைத்தேர்தல் என்பதால் உள்ளூர் பகுதி மக்களை அதிகம் கவர வேண்டும் என்பதற்காக அந்தந்த பகுதி சிறு, சிறு அமைப்புகளின் ஆதரவை பெற்று அ.தி.மு.க. பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் கடும் போட்டி நிலவுகிறது.

அரவக்குறிச்சி தொகுதியில்தான் அதிகபட்ச உச்சக்கட்ட பிரசாரம் நடந்து வருகிறது. திருப்பரங்குன்றம் தொகுதியை கவுரவ பிரச்சினையாக கருதி அ.தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

அ.தி.மு.க.வை ஆதரித்து கூட்டணி கட்சி தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வருகிற 11-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை 4 தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய உள்ளார்.

பிரேமலதா, ஜி.கே.வாசன், டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோரும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை ஒட்டப்பிடாரம் தொகுதியில் பிரசாரம் செய்ய உள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து ஏற்கனவே முதல் கட்ட பிரசாரத்தை முடித்து விட்டார். தற்போது 2-வது கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

நேற்று அவர் அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து பேசினார்.

அதுபோல அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களை ஆதரித்து டி.டி.வி.தினகரன் பிரசாரம் செய்து வருகிறார். இன்று மாலை அவர் திருப்பரங்குன்றம் தொகுதியில் கிராமம், கிராமமாக சென்று ஆதரவு திரட்ட உள்ளார். 

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment