மத்தியில் அடுத்து பாரதிய ஜனதா, காங்கிரஸ் அல்லாத புதிய ஆட்சியை அமைக்க வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவரும், தெலுங்கானா மாநில முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவ் கூறி வந்தார்.
அவரது இந்த முடிவில் நேற்று திடீரென மாற்றம் ஏற்பட்டது. மத்தியில் புதிய ஆட்சி அமைய காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்தால் அதை ஏற்க தயார் என்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபித்ரசூல்கான் ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் போது கூறியதாவது:-
மாநில கட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, “கூட்டாட்சி முன்னணி” உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு தெரிவித்துள்ளார். அவரை எங்கள் கட்சித் தலைவர் சந்திரசேகரராவ் அடுத்த வாரம் சந்தித்து பேச உள்ளார்.
மத்தியில் அடுத்து மாநில கட்சிகளின் கூட்டாட்சி முன்னணிதான் ஆட்சியை பிடிக்கும். ஒரு வேளை மத்தியில் அரசைமைக்க எங்களுக்கு போதிய எம்.பி.க்கள் பலம் இல்லாமல் போகும் பட்சத்தில் காங்கிரசின் உதவியை நாடுவோம். காங்கிரஸ் கட்சி எங்களுக்கு ஆதரவு கொடுத்தால் ஏற்றுக் கொள்வோம்.
காங்கிரஸ் அளிக்கும் ஆதரவு வெளியில் இருந்து தான் இருக்கும். எங்கள் அரசில் காங்கிரஸ் பங்கு பெறாது. காங்கிரசுக்கு எந்த ஒருஅதிகாரத்தையும் நாங்கள் கொடுக்க மாட்டோம்.
ஆட்சி, அதிகாரத்தை நடத்தும் டிரைவர் சீட்டில் மாநில கட்சிகள்தான் இருக்கும். எனவே காங்கிரஸ் ஆதரவு கொடுத்தாலும் புதிய அரசு கூட்டாட்சி முன்னணியின் அரசாகத் தான் இருக்கும்.
அதுபோல பிரதமர் பதவியையும் நாங்கள் காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம். கூட்டாட்சி முன்னணியில் உள்ள மாநில கட்சிகளின் தலைவர்களில் யாராவது ஒருவர்தான் புதிய பிரதமராக பதவி ஏற்பார். நாங்கள் அதுபற்றி ஆலோசித்து ஒருமித்த அடிப்படையில் புதிய பிரதமரை தேர்ந்து எடுப்போம்.
காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது போல பாரதிய ஜனதா ஆதரவு கொடுக்க முன் வந்தால் ஒரு போதும் ஏற்க மாட்டோம். பாரதிய ஜனதாவுடன் கூட்டணி சேருவதை நாங்கள் விரும்பவில்லை.
மேலும் மத்தியில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைக்க உதவிகள் எதுவும் செய்ய மாட்டோம். மாநில கட்சித் தலைவர்கள் அனைவரும் இதில் ஒருமித்த கருத்துடன் இருக்கிறோம்.
பாராளுமன்ற தேர்தலில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தி.மு.க. ஆகிய கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. காங்கிரஸ் கட்சி 100 இடங்களுக்குள் தான் வெற்றி பெறும்.
எனவே கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு ஆதரவு கொடுத்து இருப்பது போல மத்தியில் எங்களை ஆதரிப்பதை தவிர காங்கிரஸ் கட்சிக்கு வேறு வழி இல்லை. இடது சாரி கட்சிகளும், கூட்டாட்சி முன்னணிக்கு ஆதரவாக உள்ளனர்.
எனவே மத்தியில் கூட்டாட்சி முன்னணி ஆட்சி மலரும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment