இலங்கையுடன் 1995ஆம் ஆண்டு செய்துகொண்ட உடன்பாட்டில் சில திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அத்தோடு, இலங்கையுடன் புதிய இராணுவ உடன்பாடு எதையும் முன்மொழியவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரக பேச்சாளர் ஒருவரே இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையுடன் 1995ஆம் ஆண்டு செய்துகொண்ட உடன்பாட்டில், சில திருத்தங்களை மேற்கொள்வதற்கு மாத்திரம் அமெரிக்கா கோரியுள்ளது.
அமெரிக்க இராணுவத்தினரும் பாதுகாப்புத் திணைக்களத்தைச் சேர்ந்த சிவிலியன்களும் எவ்வாறு இலங்கைக்குப் பயணம் செய்ய முடியும் என்பதை இது உள்ளடக்கியுள்ளது.
அமெரிக்காவும் இலங்கையும் இரண்டு நாடுகளினதும் மக்கள் மற்றும் பிராந்தியத்தின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக, வலுவான ஒத்துழைப்பை கட்டியெழுப்பியுள்ளன.
இந்த புதுப்பிப்புகள் ஏற்கனவே இடம்பெறும் செயன்முறைகளை சீர்செய்து, பயங்கரவாத எதிர்ப்பு நடைமுறைகள், கடல் பாதுகாப்பு மற்றும் ஏனைய பொதுவான கரிசனைக்குரிய விவகாரங்களின் மீது இலங்கை இராணுவத்துடன் ஒத்துழைக்க உதவுகின்றன.
இலங்கையில் அமெரிக்க படைகள் தளம் அமைப்பதற்கோ அல்லது இங்கு கருவிகளை வைத்திருக்கவோ எந்த வகையிலும் இந்த உடன்பாடு அனுமதிக்காது.
அமெரிக்க படையினர், கப்பல்கள், விமானங்கள், இலங்கையின் பிராந்தியத்துக்குள்ளேயோ அதன் நீர்ப்பரப்புக்குள்ளேயோ வான்பரப்பிலோ நுழைவதற்கு அல்லது வெளியேறுவதற்கு அனுமதிக்கும் அல்லது மறுக்கின்ற எல்லா உரிமைகளையும் இலங்கை கொண்டிருக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment