புலனாய்வுப் பிரிவினர் எதிர்வரும் 13 ஆம் திகதி பாரிய தாக்குதல் ஒன்று இடம்பெறவுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் 4 லட்சம் பாடசாலை மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பற்றதாக மாற்றுவது எந்தவகையில் நியாயமாகும் என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.
நாட்டின் பிள்ளைகள் தொடர்பில் அதிக அக்கறை இந்த நாட்டின் அரசியல்வாதிகளை விடவும் சமயத் தலைவர்களுக்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாதுகாப்புப் பிரிவினரினதும் அரசியல்வாதிகளினதும் பிள்ளைகள் இந்த நாட்களில் பாடசாலை செல்வதில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பப் பிரிவு முதல் உள்ள மாணவர்களுக்குமாக எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இவ்வாறான எச்சரிக்கையை புலனாய்வுப் பிரிவினால், தனது பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இப்படியான ஒரு சூழ்நிலையில் பாடசாலை மாணவர்களை வீதிக்கு இறக்குவது நியாயமானதா? என வினவிய எதிர்க் கட்சித் தலைவர், பாடசாலை பாடவிதானத்தை நிறைவு செய்வது முக்கியமானதா? மாணவர்களின் பாதுகாப்பு முக்கியமானதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
எமக்கு குண்டு துளைக்காத வாகனம் உண்டு. ஆனால், மாணவர்களுக்கு அவ்வாறு இல்லை. மாணவர்களின் வாழ்க்கையுடன் அரசியல் சூது விளையாட வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தான் இந்த வேண்டுகோளை விடுப்பது முன்னாள் ஜனாதிபதியாகவோ அல்லது எதிர்க் கட்சித் தலைவராகவோ இருந்து அல்ல. அன்புள்ள ஒரு தந்தையாக எனவும் அவர் பாராளுமன்றத்தில் மேலும் கூறியுள்ளதாக சகோதர தேசிய நாளிதழொன்று இன்று அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment