இலங்கையிலிருந்து ரீயூனியன் தீவுக்கு 120 இலங்கையர்களை படகில் அழைத்துச் சென்ற விவகாரத்தில், 3 இந்தோனேசிய ஆட்கடத்தல்காரர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பான விசாரணை மே 15ஆம் திகதி இடம்பெற்றது. இதன்போதே 3 இந்தோனேசியர்களுக்கும் 12 மாதங்கள் முதல் 15 மாதங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக ரியூனியன் தீவிலிருந்து செயல்படும் Imaz Press என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் மார்ச் மாதம் முதல், 273 இலங்கையர்கள் ரீயூனியன் தீவுக்கு சென்றடைந்திருக்கின்றனர். அதில் 130 பேர் இன்றும் அத்தீவில் வசித்து வருகின்றனர்.
சமீப ஆண்டுகளாக அவுஸ்ரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்களின் முயற்சிகள், கடுமையான கட்டுப்பாடுகளின் காரணமாக தோல்வி அடைந்து வருகின்றது. இந்த நிலைமையை கருத்திற்கொண்டு, பிரான்சின் தீவுப்பகுதிக்கு செல்லும் முயற்சியை இலங்கையர்கள் நம்பியிருக்கலாம் என கருதப்படுகின்றது.
இதற்கு முன்னர் கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி மீன்பிடி படகு வழியாக 120 இலங்கையர்கள் 4000 கிலோ மீட்டர் தூரம் பயணித்து இந்திய பெருங்கடலில் அமைந்திருக்கும் ரீயூனியன் தீவுக்கு சென்றடைந்திருந்தனர். இதற்காக ஒவ்வொருவரும் தலா 2 இலட்சம் இந்திய ரூபாய் முதல் சுமார் 5 இலட்சம் ரூபாய் வரை ஆட்கடத்தல்காரர்களிடம் வழங்கியிருந்தனர்.
இந்திய பெருங்கடலில் அமைந்திருக்கும் ரீயூனியன் தீவு, பிரஞ்சு அரசு நிர்வகிக்கும் தீவாக இருந்து வருகின்றது. இந்த தீவுக்குச் சென்ற இலங்கையர்கள், பிரஞ்சு அரசிடம் தஞ்சம் கோரும் முயற்சியை மேற்கொண்டிருந்தனர்.
இது ஆட்கடத்தல் நிகழ்வாக அணுகிய பிரஞ்சு அரசு, அவர்களுக்கு தஞ்சமளிக்க மறுத்து 120 பேரில் 60 பேரை நாடுகடத்தியது. இந்த சூழலில், இவர்களை அழைத்துச் சென்ற 3 இந்தோனேசிய படகோட்டிகளும் சட்டவிரோத குடியேற்றத்துக்கு துணைப்புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டடு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment