தமிழர்களுக்குக் கழுத்தை அறுத்துக் காண்பித்த சைகை சரியானதே. நாட்டைத் துண்டாட நினைத்தால் இன்னொரு நந்திக்கடல் நிலைமை ஏற்படும். நாட்டைத் துண்டாட முயல்வோருக்கு 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நந்திக்கடலில் நேர்ந்த நிலைமையே ஏற்படும்.
இவ்வாறு இராணுவத்தின் ஓய்வுபெற்ற தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான வியத்மக அமைப்பு ‘நாடும் – நாளையும்’ என்ற தலைப்பில் நாடு தழுவிய ரீதியில் நடத்தத் தீர்மானித்த கருத்தரங்கின் முதலாவது அமர்வு பியகமவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் கமால் குணரத்ன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் தெரிவித்ததாவது,
லண்டனில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ கழுத்தை அறுப்பது போன்ற சைகையைக் காண்பித்து அங்கிருந்து சென்றார். எமது நாட்டில் நல்லிணக்கம் தொடர்பில் பெரிதாக அலட்டிக்கொள்ளும் பலரும், பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் அந்த செயல் இராஜதந்திர செயற்பாடுகளுக்கு பொருத்தமற்றது என்றும், கீழ்த்தரமான செயல் என்றும் குற்றம்சாட்டினர்.
தனது தாய்நாட்டின் தேசியக் கொடியை கீழே போட்டு மிதித்துக்கொண்டிருப்பதைக் கண்டதும் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்கும் இராணுவ அதிகாரியொருவர் இருந்தால், அவர் இராணுவ அதிகாரியாக இருக்க முடியாது.
வடக்கில் பிரபாகரனின் அதிகாரம் இருக்கும் போது வாலைச் சுருட்டிக்கொண்டு நாய்க்குட்டிகளைப் போல் இருந்துவிட்டு இன்று வெளியில் வந்து நாய்களைப் போல் குரைத்துக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சிலருக்காக நாட்டின் இறையாண்மையைக் காட்டிக்கொடுக்க நாம் தயாரில்லை.
வெளிவிவகார அமைச்சர் அங்கு சென்று ஜெனிவாத் தீர்மானத்தின்படி வெளிநாட்டு நீதிபதிகளை இணைத்துக்கொள்ள எமது நாட்டின் அரசியல் சாசனத்தில் இடமில்லை என்று அறிவித்தார். எதற்காக மீண்டும் அந்தத் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கினீர்கள்?. அன்று செய்த அதே துரோகத்தை எதற்காக இம்முறையும் செய்தீர்கள்?" - என்றார்.
அதேவேளை, போர் இறுதியில் 53 ஆவது படையணியை வழிநடத்திய கமால் குணரட்ன மீதும் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பல்வேறு தரப்பினரால் சுமத்தப்பட்டு வருகின்றமை தெரிந்ததே.
0 comments:
Post a Comment