தடுத்து நிறுத்தப்பட்ட காணி சுவீகரிப்பு!



யாழ்.மண்டைதீவில் கடற்படையினர் நிலை கொள்வதற்காக பொது மக்களுக்குச் சொந்தமான 18 ஏக்கர் காணி சுவீகரிப்பதற்காக இன்று நடைபெறவிருந்த நில அளவை நடவடிக்கை எதிர்ப்பு போராட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது. 

இன்று காலை 9 மணியளவில் மண்டைதீவு கிழக்கு அம்மன் கோவில் முன்பாக நடைபெற்ற போராட்டம் தொடர்பில் மேலும் தெரியவருவது:

வேலணை பிரதேசசெயலர் பிரிவுக்கு உட்பட்ட மண்டைதீவு கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ள கடற்படையினர் அப்பகுதியில் உள்ள சுமார் 11 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கர் 1 நூட் 10 பேர்ச்சஸ் காணியை ஆக்கிரமித்து அதில் முகாமிட்டுள்ளனர். 

குறித்த படைமுகாம் அமைந்துள்ள காணியை நிரந்தரமாக சுவீகரித்து படை முகாமினை விஸ்தரிப்புச் செய்வதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர். 

இந்நடவடிக்கையில் முதற்கட்டமாக குறித்த காணியை சட்ட ரீதியில் சுவீகரிப்பதற்கான முன்னெடுப்புக்களை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

இதன்படி குறித்த காணிகளை சுவீகரிக்க போவதாகவும், அதற்கான நில அளவை நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் நில அளவை திணைக்களத்தினால் காணி உரிமையாளர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. 

குறித்த அறிவிப்பின்படி இன்று வியாழக்கிழமை அக் காணிகள் நில அளவை செய்யப்படவுள்ளதாகவும் அவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

காணி சுவீகரிப்புக்கான நில அளவை நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே காணி உரிமையாளர்கள், அப்பகுதி மக்கள் மற்றும் பொது அமைப்புக்களுடன் இணைந்து நில அளவையை தடுத்து நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தினை அடுத்து கணி சுவீகரிப்புக்காக நில அளவை செய்ய வந்த நில அளவை திணைக்களத்தினர் மக்களின் எதிர்ப்பால் நில அளவை செய்யாமல் திரும்பிச் சென்றனர்.
Share on Google Plus

About Editor Jeen

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment