விஷ ஜந்துகளின் உருவ களிமண் பொம்மைகளை உடைத்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விநோத வழிபாடு தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் இன்றளவிலும் நடத்தப்பட்டு வருகிறது.
காவிலி பாளையத்தை அடுத்த அலங்காரி பாளையத்தில் சுமார் 300 ஆண்டு பழமையான அய்யன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வரும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாத்திரம் விசேட பூஜைகள் நடக்கும்.
இதன்போது, விஷ ஜந்துகளின் உருவ களிமண் பொம்மைகளை உடைத்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
இந்த நிலையில், சித்திரை மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையான நேற்று (28ம் திகதி), அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வரத் தொடங்கினர்.
அவர்கள், கோவிலுக்குச் செல்லும் முன்பு, கோவில் வளாகத்தில் 10 ரூபாவுக்கு விற்கப்படும் பாம்பு, தேள், பூரான், பல்லி, ஓணான் போன்ற விஷ ஜந்துகளின் களிமண் பொம்மைகளை வாங்கினர்.
இந்த பொம்மைகளை, ஐய்யன் மற்றும் கருப்பராயன், தன்னாசியப்பன், பாம்பாட்டி போன்ற தெய்வங்கள் முன் வைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்ட பின்னர் அந்த பொம்மைகளை கல்லில் உடைத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து, மூலவர் ஐய்யன் சுவாமிக்கு அலங்காரம் மற்றும் அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இந்த வினோத வழிபாடு குறித்து பக்தர்கள் கூறுகையில்,
இவ்வாறு செய்வதால், வீடு மற்றும் தோட்டப் பகுதிகளில் விஷ ஜந்துகள் நடமாட்டம் இருக்காது. மனிதர்களையும் விஷ ஜந்துகள் தீண்டாது” என தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment