மீள் குடியேறி இரு வருடங்கள் கடந்தும் இதுவரையில் எதுவித அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி அவதியுறுகிறோம். அரச அதிகாரிகள் தொடர்ச்சியாக பாராமுகமாக செயற்படுகிறார்கள். இவ்வாறு விசனம் தெரிவித்துள்ளனர் மன்னார் முள்ளிக்குளம் மக்கள்.
மன்னார் முள்ளிக்குளம் மக்கள் யுத்தகாலப் பகுதியில் இராணுவ நடவடிக்கை காரணமாக தமது சொந்தக் காணிகளிலிருந்து, வெளியேற்றப்பட்டு தற்காலிகமாக மலங்காடு பகுதியில் கட்டாயத்தின் பேரில் குடியமர்த்தப்பட்டனர்.
கடந்த 2016 ஆண்டு முள்ளிக்குளம் கடற்படை முகாமுக்கு முன்பாக மக்கள் முன்னெடுத்த தொடர் போராட்டம் காரணமாக, மக்கள் முள்ளிக்குளம் கிராமத்திற்குள் மீள் குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
மீள்குடியேறி இரண்டு வருடங்கள் கடந்தும் முள்ளிக்குள மக்கள் அடிப்படை வசதிகள் இதுவரையில் பூர்த்தி செய்யப்படவில்லை. இந்த நிலையில் அப்பகுதி மக்கள் தெரிவித்ததாவது,
பொருளாதார ரீதியில் மிகவும் சிரமப்படுகிறோம். தண்ணீர் கல்வி உள்ளிட்ட எனைய பொதுத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பல மைல் தூரம் செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலையில் வாழ்கிறோம்.
பெண்கள் அதிகமாக இருக்கும் நிலையில் எங்களுக்கு மலசல கூட வசதிகள் இல்லை மழைகாலங்களில் கிழிந்த கொட்டில்களில் தங்கமுடியாத நிலையும் குளம் நிரம்புவதால் வெள்ளப்பாதிப்பும் ஏற்படுகிறது.
மின்சாரம் இல்லாததால் இரவு நேரங்களில் யானைகளின் தொல்லைகள் அதிகமாகவிருக்கிறது. நாம் மீண்டும் மலங்காட்டு பகுதிக்கே செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது. தற்காலிக கொட்டில்களில் தான் நாம் வசிக்கிறோம். என்றனர்.
இந்த நிலையில், சம்மந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு தங்களுக்கு உரிய அடிப்படை வசதிகளையாவது செய்துதர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஆனாலும் முள்ளிக்குளம் பகுதியில் வாழும் கடற்படையினர் மின்சார வசதி மற்றும் முள்ளிக்குள மக்களின் அடுக்கு மாடி கட்டடங்கள், வீடுகளில் சொகுசு வாழ்கை வாழ்வதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
0 comments:
Post a Comment