மனைவியைப் பழிவாங்க மகள்மீது தந்தை பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் இந்தியாவின் கேரள மாநிலத்தின் கொச்சி நகரில் அரங்கேறியுள்ளது.
கொச்சி நகரில் உள்ள திருக்காக்கரை பகுதியில் குடியிருந்து வருபவர் 43 வயதான அபுபக்கர்.
மதுவுக்கு அடிமையான இவர், மனைவியையும் பிள்ளைகளையும் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இதனால் குடும்பத்தில் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்துச் சென்றுள்ளது. ஒருகட்டத்தில் பொறுமை இழந்த அபுபக்கரின் மனைவி தமது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு கடந்த வாரம் உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை இரவு அந்தக் குடியிருப்புக்குச் சென்ற அபுபக்கர், 12 வயதான தமது மகளை கசேரை ஒன்றில் வலுக்கட்டாயமாக அமர்த்தி, தான் கொண்டுவந்த பெட்ரோலை சிறுமி மீது ஊற்றியுள்ளார்.
பின்னர் தீ வைக்க முயன்ற அவரை மனைவியும் உறவினர்களும் சேர்ந்து தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதனிடையே அலறல் சத்தம் கேட்டுத் திரண்ட அயலவர்களைக் கண்டதும் அபுபக்கர் அங்கிருந்து தப்பியுள்ளார்.
தொடர்ந்து அபுபக்கரின் மனைவியும் உறவினரும் சேர்ந்து பொலிஸாரை அணுகி முறைப்பாடு செய்துள்ளனர்.
இதன் அடிப்படையில் அபுபக்கரைக் கைது செய்த பொலிஸார், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.
0 comments:
Post a Comment