நாட்டில் செலவினங்களைக் குறைப்பதற்காக ஜனாதிபதி பதவி மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு முதல்முறையாக ஒரே நேரத்தில் தேர்தல் நடத்திய பணிச்சுமையால் 272 அரச பணியாளர்கள் உயிரிழந்தனர்.
இந்தத் துர்ப்பாக்கிய சம்பவம் இந்தோனேசியாவில் நடந்துள்ளது.
தேர்தலுக்காக செய்யப்படும் செலவினங்களை குறைக்கும் நோக்கத்தில் அந்த நாட்டின் ஜனாதிபதி பதவி, நாடாளுமன்றம் மாநில சட்டமன்றங்களுக்கு கடந்த 17 ஆம் திகதியன்று ஒரேநாளில் தேர்தல் நடத்தப்பட்டது
சுமார் 26 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தோனேசியாவில், முதல்முறையாக மூன்று தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன. வாக்களிக்கும் உரிமை கொண்ட 19.3 கோடி மக்களில் 80 சதவீதம் பேர் இந்தத் தேர்தல்களில் வாக்களித்தனர்.
ஆனால். இந்தோனேசியாவின் கிழக்கு எல்லையிலிருந்து மேற்கு எல்லை வரையிலான சுமார் 5 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 8 இலட்சம் வாக்குச்சவடிகளை அமைத்து, வாக்குச்சீட்டு முறையில் போடப்பட்ட வாக்குகளை எண்ணும் பணிகளை மேற்பார்வையிடுவது அவ்வளவு எளிதான பணியாக அமைந்து விடவில்லை.
இந்த நிலையில், தேர்தல்கள் தொடர்புபட்ட கூடுதல் பணிச்சுமையால் உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்றிரவு வரை 273 பேர் உயிரிழந்ததாகவும் 1878 பேர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தோனேசியா தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஓராண்டு சம்பளத்துக்கு நிகரான பணத்தை இழப்பீடாக அளிக்க தேர்தல் கமிஷன் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில இடங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் இந்த தேர்தல்களின் முடிவு மே மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment