இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல் மாதம் 11ஆம் திகதியிலிருந்து மே மாதம் 19ஆம் திகதி வரை தேர்தல் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியா முழுவதும் மிக மும்முரமாக பிரசார வேலைகள் நடை பெற்று வருகின்றது.
தென் இந்திய தேர்தல் அரசியலில் குறிப்பாக தமிழ் நாட்டு கட்சிகளும் தமது கூட்டுகளை அமைத்து வருகின்றன. கடந்த காலங்களைப் போல் அல்லாது இம்முறை ஒரு புறத்தில் மதவாத, சாதீயவாத கட்சிகளும் மறு புறத்தில் சமய சார்பற்ற, திராவிடவாத கட்சிகளும் தமது கூட்டுகளை அணி திரட்டும் அதேவேளை, மேலும் அதிகமாக தமிழ் தேசிய வாதம் என்னும் ஒரு அலகு குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கி இருப்பதால் மும்முனையாக தமிழ் நாட்டு அரசியல் களம் வடிவெடுத்துள்ளது.
மதவாத சாதீய வாத கட்சிகள் என்று தமிழ் நாட்டு வெகுசன தொடர்பு ஆய்வாளர்களால் விபரிக்கப்படும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அஇஅதிமுக) பாரதீய ஜனதா கட்சி(பாஜக), மருத்துவர் இராமதாஸ் அவர்களின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) ஆகியவற்றுடன் நடிகர் விஜயகாந்த் அவர்களின் தேமுதிக என்று அழைக்கப்படும் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் ஆகியனவும்-
மதசார்பற்ற கட்சிகளாக சித்தரிக்கப்படும் திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) இந்திரா காங்கிரஸ் மற்றும் வைகோ அவர்களின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (மதிமுக) திருமாவளவனின் விடுதலைசிறுத்தைகள் கட்சி ஆகியனவும் கூட்டு சேர்ந்து இரு பெரும் பிரிவுகளாக போட்டியிடுகின்றன.
2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவி ஜெயலலிதா வின் மறைவுக்கு பின்னர் தமிழ் நாட்டு ஆட்சி நிலை முற்று முழுதாக மத்திய ஆழும் கட்சி ஆன பாரதீய ஜனதா கட்சியினதும் பிரதமர் நரேந்திர மோடியினதும் பிடியிலேயே இருந்ததாக பல்வேறு செய்திகளும் வந்துள்ளன.
கடந்த இரண்டு வருட அஇஅதிமுக ஆட்சியில் அந்த கட்சி மக்கள் மத்தியில் தனது தோற்றத்தை இழந்து விட்டது மட்டுமல்லாது, மத்திய அரசுடனான பேரம் பேசும் சக்தியையும் இழந்து நிற்பதாகவும், தமிழ் மக்கள் மத்தியில் நற்பெயர் எடுக்கமுடியாத சந்தன நிற கட்சியாகிய பாஜகவின் கைகளில் அதிமுக சிக்கி தவிப்பதாக தென் மாநில பத்திரிகைகள் கூறுகின்றன
இதனை நிரூபிக்கும் முகமாக தமது தேர்தல் கூட்டணியை அதிமுக, பாஜக, பாமக ஆகியன இணைந்து கூட்டு அமைக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு ஈழத்தமிழர் படுகொலைகளின் போது அதனை தடுத்து நிறுத்த தவறிய திமுக பத்து வருட இடைவெளியின் பின்பு தற்போது மீண்டும் காங்கிரசுடன் கூட்டு சேர்ந்து களம் இறங்குகிறது.
ஈழத்தமிழர் விவகாரத்தினால் கடந்த தேர்தலில் மக்களின் அதிக வெறுப்பை சம்பாதித்த கட்சியாக இருந்த திமுக, அதன் தலைவர் மு கருணாநிதியின் மறைவை அடுத்து புதிய தொரு பிரதிநித்துவ உருவமைப்பு பெற்று விட்டது போன்ற எண்ணக்கருவின் அடிப்படையில் மீண்டும் காங்கிரசுடனேயே கூட்டு சேர்ந்து தேர்தல் களத்தில் இறங்குகிறது.
இம்முறை மதிமுகவின் ஒத்தாசை திமுகவுக்கு இருப்பது ஈழத்தமிழர் விவகாரத்தில் மன்னிப்பு பெற்று கொண்டது போன்ற தோற்றப்பாட்டை கொண்டுள்ளது எனலாம்
அதேவேளை, கடந்த காலங்களில் இல்லாத ஒரு மூன்றாவது தரப்பாக தமிழர் தேசியம் பேசும் நாம் தமிழர் கட்சியின் தாக்கம் இம்முறை முன்னைய காலங்களிலும் பார்க்க வலுப்பெற்றிருப்பது முக்கியமான விடயமாகும் . நேரடியாக தாம் பிரபாகரனின் பிள்ளைகள் என மானசீகமாக உரிமை கோரிக் கொள்ளும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தன்னை ஒரு சூழல் பாதுகாப்பு வாதியாகவும் புரட்சிகர போக்குடையவாராகவும் காட்டி கொள்கிறார்.
இளம் சமுதாயமே தனது வாக்கு வங்கி என்ற பார்வையுடன் தாம் எந்த வேறு அரசியல் கட்சிகளுடனும் கூட்டு வைத்து கொள்வதில்லை என்ற தனித்துவ போக்கையும் கொண்ட பாங்கு அவருக்கு அதிக செல்வாக்கை கொண்டு வந்துள்ளதாக பல்வேறு ஆய்வாளர்களும் கூறி வருகின்றனர்.
இன்றைய நிலையில் முக்கிய பேச்சுப்பொருள்களாக தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் சில விவகாரங்கள் உள்ளன. இவற்றில்,
வைத்திய துறையில் பட்டம் பெற விரும்பும் மாணவர்களுக்கு National Eligibility and Entrance Test எனும் NEET தேர்வு என்ற பெயரில் மத்திய அரசின் ஏற்பாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட , வறிய மாணவர்களுக்கு வைத்திய துறையில் வாய்ப்பை குறைக்க கூடிய வகையிலான, பரீட்சை முறையை அகற்றும் விவகாரம்-
தமிழ் நாட்டின் பிரதான விவசாய நிலமாக கருதப்படும் காவேரி வளைகுடா பகுதியில் விவசாயத்திற்கு தீங்கு வளைவிக்க கூடிய வகையிலான நிலத்தடி வாயுஎரிபொருள், நிலத்தடி நீர் மற்றும் கனிமங்களை வியாபாரமாக்கும் திட்டம் இந்த திட்டத்தை பல்தேசிய கம்பனிகளின் ஆதரவுடன் மத்திய அரசு கையாளுவது-
உள்ளூர் இளைஞர், யுவதிகள் வேலையில்லாத நிலையில் இருக்கும் அதேவேளை பிற மாநிலங்களில் இருந்து வரும் வேலையாட்கள் தமிழ் நாட்டில் அரச மற்றம் தனியார் துறைகளில் பெருமளவில் சேர்த்து கொள்ளப்படுவது-
என, மத்திய அரசின் அதிகாரமும் அதனை மிகக்கவனமாக செயல்படுத்த கூடிய அரச கட்டமைப்பும் தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் மாநில சுய ஆட்சி அதிகாரத்திற்கு எதிராக பெரும் தடைகளை உருவாக்கி வருகிறது.
தேர்தல் காலத்தில் கட்சிகள் தமது வாக்காளர்களை திருப்திபடுத்த ஏதுவான வகையில் வாக்குறுதிகளை எவ்வளவுதான் அள்ளி வழங்கினாலும் ஆட்சிப்பதவியில் வந்ததும் தமிழ் நாட்டு கட்சிகள் பெருமளவில் அதிகார மற்ற நிலையிலேயே விடப்பட்டுள்ளன.
ஏந்த கட்சி மத்தியில் நாடாளுமன்ற ஆட்சி பதவிக்கு வந்தாலும் தேர்தல் முடிந்ததும் தமது சொந்த முரண் பாடுகளையும் அரசியல் முரண்பாடுகளையும் மறந்து மாநிலங்களுக்கு மேலும் அதிக சுயாட்சி பெற்று கொடுப்பதில் ஒற்றுமையாக செயற்படுவது மிக அவசியமாகிறது .
உள்ளுரில் மாநிலகட்சிகள் தமது பதவிப் போட்டிகளுக்கு அப்பால் தமது மாநிலம் சார்ந்து போது நோக்கில் செயற்படாத வரையில் சுயாட்சி குறித்த முன்னேற்றத்தை அடைய முடியாது என்ற நிலையே தமிழகத்தில் உள்ளது.
கடந்த காலங்களில் திமுக, அதிமுக ஆகிய இருகட்சிகளும் விதண்டாவாதத்திற்கு போட்டி போட்டு கொண்டு ஒருவர் ஒன்று சொன்னால் அதனை மற்றவர் மறுத்து வாக்களிக்கும் நிலையே இருந்து வந்தது. இன்று அந்த பழைய சிந்தனைகளும் தேர்தலுக்கு பின்பும் போட்டி அரசியல் செய்யும் முறைமை நிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கல்வி மீதான மத்திய அரசின் கையாளுகை குறித்து வரலாற்றாசிரியரான பேராசிரியர் கருணானந்தன் அவர்கள் கருத்தரங்கு ஒன்றில் குறிப்பிடுகையில் மத்திய அரசின் கல்வி மீதான தலையீடுகளால் பல்தேசிய கம்பனிகளை மையமாக நோக்கிய கல்வியே தற்கால மாணவர்கள் மத்தியில் திணிக்கப்படுகிறது . வரலாறோ, மொழியியலோ மெய்யியலோ, அல்லது தத்துவமோ கற்பதற்கான நிதிஒதுக்கிடு மத்திய அரசினால் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படுவதில்லை
பதிலாக பல்தேசிய கம்பனிகளில் வேலை வாய்ப்பை மையமாக வைத்து மின் அணுத்துறை கணினிமென் பொருள்துறை குறித்த கல்விக்கான நிதி ஒதுக்கீடே அதிகம் செய்யப்படுவதால் எமது பண்பாடு வரலாறு என்பன அடியோடு அழிந்து போக கூடிவகையிலான நிலை உருவாக்கப்படுகிறது என்கிறார்.
இங்கே மாணவர்களின் அறிவு குறிப்பிட்ட சில பொருளாதார வளர்ச்சி நோக்கங்களை மட்டும் மையமாக வைத்து மனித வலு உற்பத்தி செய்யப்படுகிறதே அன்றி நீண்டகால தேசிய பண்பாட்டு வளர்ச்சி முற்ற முழுதாக இல்லாது ஒழிக்கப்படுகிறது என்பது பல்வேறு கல்வியாளர்களதும் பொதுகருத்தாக பார்க்கப்படுகிறது.
அதேவேளை, ஈழத்தமிழர் விவகாரம் இம்முறை தேர்தலில் ஒரு பொதுப்படையான விவகாரமாகவே காணப்படுகிறது. ஒவ்வொரு கட்சியிலும் ஈழத்தமிழர்கள் குறித்த சரியான விளக்கப்பாடு இருக்கிறதுடன் அதற்காக தமது உழைப்பை வழங்க கூடிய தலைவர்களும் உள்ளனர். ஆனால் இவர்கள் தமது அரசியல் தேவைகளுக்காக மட்டுமே இன்னமும் இந்த விவகாரத்தை கையிலெடுக்கத் தலைப்பட்டுள்ளனர்.
அதேவேளை இன்னமும் தமிழ் நாட்டு உள்ளுர் கட்சிகள் ஈழத்தமிழர் விவகாரத்தை கைவிட்டு தமிழ்நாட்டு அரசியலை கொண்டு செல்வது யதார்த்தத்துக்கு அப்பாற்பட்டதாகவே தெரிகிறது. ஆனால் இனிவரும் காலங்களில் ஈழத்தமிழர் விவகாரத்தை தமிழ் நாட்டு அரசியல் வாதிகளை கவனம் செலுத்த வைக்கும் பொறுப்பு ஈழத்தமிழர் கைகளிலேயே உள்ளது எனலாம்.
சர்வதேச அரங்கிலே, ஐக்கிய நாடுகள் மனித உரிமை மன்றத்தில் சிறிலங்கா அரசுக்கு மீண்டும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தமை தமிழ் மக்கள் மத்தியிலே விரக்தி நிலையையும் போராட்ட தொய்வு நிலையையும் உருவாக்கி இருக்கிறதோ என்ற எண்ணப்பாட்டை உருவாக்கி உள்ளது.
இம்முறை திமுக தேர்தல் அறிக்கையிலும் கூட, 1964ஆம் ஆண்டு சிறீமாவோ- சாஸ்திரி ஒப்பந்தத்தில் குறிப்பிட்டதற்க இணங்க மலையகத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு ஆவன செய்யப்படும் என்ற வரிகள் கூட ஈழத்தமிழர்களின் வாழ்வு உரிமை இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பன கைவிடப்பட்ட தன்மைகூட ஈழத்தமிழர்களின் புதிய அணுகுமுறைகளிலேயே தமிழகத்தை தம் பக்கம் திசைதிருப்பும் சாதுரியம் தங்கி உள்ளது என்பதையே எடுத்து காட்டுகிறது.
ஏனெனில் திராவிடவாத கட்சிகளும் சரி, 2009ஆம் ஆண்டின் பின் உயிர்ப்பு பெற்ற தமிழ் தேசியவாத கட்சிகளும் சரி பொதுவான சனாதன தர்ம ஆதிக்கமே தமிழர் பண்பாடு கல்வி வரலாறு மற்றும் இதர பிரிவுகளின் வளர்ச்சியை நசுக்குவதாக பார்க்கின்றனர்.
அதே போல ஈழத்தமிழர்களும் கூட பௌத்த சிங்கள மேலாதிக்கத்தின் பிடியில் இதே வகையான ஆழுத்தங்களால் ஈழத்தமிழர் பண்பாடு , கல்வி , வரலாறு மற்றும் இதர பிரிவுகளின் தூய்மை இழந்து செல்வாக்கிழந்து செல்வதை எதிர்க்கின்றனர்
இந்த வகையில்இருதரப்பம் காவி உடைகளின் ஆதிக்கத்தால் தாக்கப்பட்டவர்களாகவே உள்ளனர். இந்த நிலையில் தமிழ் சமுதாயத்தின் தனித்துவத்தையும் அடையாளத்தையும் பாதுகாத்தல் என்ற வகையில் ஒரு நேர் கோடு உள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
0 comments:
Post a Comment