திருகேதீஸ்வரம் வளைவு அகற்றப்பட்ட சம்பவத்தை அடுத்து மன்னார் சர்வ மதப்பேரவையிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ள இந்து சமய சகோதரர்கள் தமது முடிவை மீள்பரிசீலனை செய்து மீண்டும் இப்பேரவையில் இணைந்து செயலாற்ற முன்வர வேண்டுமென மன்னார் சர்வ மதப்பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக மன்னார் சர்வமதப்பேரவை இன்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'மன்னார் மாவட்டத்தில் பல்லின பல்சமய மக்கள் பல நூற்றாண்டு காலகமாக ஒற்றுமையாக, அமைதியாக வாழ்ந்து வந்துள்ளனர். யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் தமிழ் பேசும் மக்கள் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சினைகளில் மதம் சார்ந்த, இனம் சார்ந்த பிரச்சினைகளும் உள்ளடங்கும்.
அண்மையில் திருக்கேதீஸ்வரம் – மாந்தைச் சந்தியில் நிறுவப்பட்ட வளைவு தொடர்பான பிரச்சினை ஊடகங்கள் வாயிலாக முழு நாட்டையும் சென்றடைந்துள்ளது. இப்பிரச்சினை தொடர்பாக மன்னார் சர்வமதப் பேரவை ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தி நிற்கின்றது. இப்பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்த்துவைக்கும் முயற்சியினை மன்னார் சர்வமதப் பேரவை ஏற்கனவே ஆரம்பித்துள்ளது.
இப்பிரச்சினையோடு தொடர்புடைய கத்தோலிக்க தரப்பினருடனும் இந்து தரப்பினருடனும் முதற்கட்ட சந்திப்புக்களை நடத்தி ஒவ்வொரு தரப்பு நியாயத்தையும் விளக்கமாகக் கேட்டறிந்துள்ளது. சம்மந்தப்பட்ட தரப்பினரோடு இன்னும் பல பேச்சுவார்த்தைகளை நடத்தி அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான, நீதியான ஒரு தீர்வை எட்டுவதற்கு மன்னார் சர்வமதப் பேரவை தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளது.
மன்னார் சர்வமதப் பேரவையில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ள இந்துசமயச் சகோதரர்கள் தமது முடிவை மீள்பரிசீலனை செய்து மீண்டும் இப்பேரவையில் இணைந்து செயலாற்ற முன்வரவேண்டும். திருக்கேதீஸ்வர – மாந்தைப் பிரச்சினைக்கு சுமுகமான ஒரு தீர்வைக் காண சம்மந்தப்பட்ட தரப்பினரும், ஏனையவர்களும் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டுமென மன்னார் சர்வமதப் பேரவையினராகிய நாம் அன்புடன் அழைப்புவிடுக்கின்றோம்' என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
#ThiruketheeswaramTemple #MannarChristianity #MannarHindus #ChristianAssociation #WelcomeArc #Thiruketheeswaram #MannarNews #Shivaratri #Hindus #Christians #Church #SivanTemple #Madu #TamilNewsKing
0 comments:
Post a Comment