ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசின் சார்பில் உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன கூறியவைகளை நாம் நிராகரிக்கின்றோம். அவை உண்மைக்குப் புறம்பானவை. சட்டத்துக்கு முரணானவை. அது தொடர்பில் எங்களின் கடுமையான எதிர்வினையை வரும் நாட்களில் நீங்கள் காணலாம்."
இவ்வாறு கருத்து வெளியிட்டார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.
ஜெனிவாவிலிருந்து இலங்கை திரும்பும் வழியில் லண்டனில் வைத்து ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,
தன்னுடைய ஐக்கிய தேசியக் கட்சி சிங்கள மக்கள் மத்தியில் மதிப்பை ஆதரவை இழந்துவிடக்கூடாது என்பதற்காக சில விடயங்களை ஜெனிவாவில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன கூறியிருக்கலாம். ஆனால், அதற்காக அவருக்கு வக்காளத்து வாங்க வேண்டிய தேவை எமக்கில்லை.
அவர் கூறிய அத்தகைய கூற்றுக்கள் அனைத்தையும் நான் நிராகரிக்கின்றேன். அவை உண்மைக்குப் புறம்பானவை, சட்டத்துக்கும் புறம்பானவை.
இப்போதுதான் ஐ.தே.க. அப்படி ஒரு கூற்றை முதல் தடவையாக வெளியிடத் தொடங்கியிருக்கின்றது. இது தொடர்பில் எங்களின் கடுமையான எதிர்ப்பை அடுத்துவரும் சில நாட்களில் நீங்கள் காணலாம்.
எங்கள் முயற்சியில் இனப்பிரச்சினைக்குத் தீர்வான அதிகாரப் பரவலாக்கலை உள்ளடக்கிய புதிய அரசமைப்புக்கான ஒரு வரைவு வடிவம் வெளிவந்திருக்கின்றது. அது உண்மை.
இன்றுள்ள அரசியல் சூழ்நிலையில் அதைத் தொட்டுப்பார்க்க - மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க எல்லோருக்கும் பயம். அதை முற்கொண்டு செல்வதற்கு எவருக்கும் அரசியல் துணிச்சல் இல்லாமல் இருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அந்த அரசியல் துணிச்சல் கிடையாது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் கொஞ்சம் அரசியல் துணிவு கூடுதலாக இருந்தது என்று நாம் நினைத்திருந்தோம். ஆனால், அவரும் இப்போது தலைகீழாக மாறி நிற்கின்ற காரணத்தினாலே அதுவும் பின்னடைவு கண்டிருக்கின்றது.
0 comments:
Post a Comment