பொள்ளாச்சி பகுதி கால்வாயில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் உள்பட அறுவர் உயிரிழந்தனர்.
பிரகாஷ்(45), அவரது மனைவி சித்ரா(40), மகள் பூஜா(8), பிரகாஷின் மூத்த சகோதரி சுமதி(50), பிரகாஷின் சகோதரர் பன்னீர்செல்வத்தின் மனைவி லதா(42), இவர்களது மகள் தாரணி(9) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
மசக்காளிபாளையத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் பழனி கோவிலுக்கு சென்று விட்டு தங்கள் சொந்த ஊருக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோதே இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த துர்ப்பாக்கிய சம்பவம் நடந்துள்ளது.
பொள்ளாச்சி - உடுமலை சாலையில் கெடிமேடு என்ற இடத்தில் உள்ள கால்வாயில் கார் ஒன்று மிதந்ததை பொதுமக்கள் கண்டனர்.
தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறை மற்றும் பொலிஸார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர், கிரேன் உதவியுடன் கார் மீட்கப்பட்டது.
காருக்குள் 6 பேரது சடலங்கள் இருந்தன. விபத்தில் உயிரிழந்தவர்கள், கோவை மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரகாஷ் என்பவர், தனது மனைவி, இரு குழந்தைகள் மற்றும் சகோதரர் குடும்பத்தினருடன் அந்த காரில் சென்றதாகக் கூறப்படுகிறது.
குறிப்பிட்ட அந்த இடத்தில் சாலை அகலமாகவும், அதன் வளைவில் பாலம் குறுகியதாகவும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
நள்ளிரவில் கார் வேகமாகச் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து, கால்வாயில் பாய்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கால்வாயில் கார் விழுந்த போது கதவுகள் அனைத்தும் லாக் செய்யப்பட்டிருந்த காரணத்தால், யாராலும் தப்பித்து இருக்க முடியாது என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இதையடுத்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய பொலிசார் இது குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment