மதங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளை ஆராய 9 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது. இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
இந்து குருக்கள் சபையின் தலைவர் சிவசிறி கே.வீ.கே. வைத்தீஸ்வரக் குருக்கள் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை அவரது அலுவலகத்தில் நேற்றுச் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின்போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார் என்று அவரது ஊடகப் பிரிவு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் உள்ளதாவது,
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயப் பகுதியில் நேற்று (நேற்று முன்தினம்) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கவனம் செலுத்திய ஆளுநர், இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அனைத்து மதங்களின் பிரதிநிதிகள் குழுவொன்றை அமைக்கக் கலந்துரையாடல்களை மேற்கொள்வதனூடாக இந்தப் பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
குழுவில் இந்து மதத்தைச் சேர்ந்த மூன்று பேர், கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த மூவர், பொலிஸ் அலுவலர் ஒருவர், மாவட்டச் செயலர் சார்பில் ஒருவர் மற்றும் பொது அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உள்ளடங்கலாக ஒன்பது பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று ஆளுநர் தெரிவித்தார்.
சந்திப்பின்போது சிவசிறி கே.வீ.கே. வைத்தீஸ்வரக் குருக்கள் ‘இந்து ஒளி’ சஞ்சிகை மற்றும் நந்திக்கொடி ஆகியவற்றை ஆளுநரிடம் கையளித்து ஆளுநருக்கு ஆசீர்வாதம் வழங்கினார். ஆளுநரின் செயலர் இ.இளங்கோவனும் சந்திப்பில் கலந்து கொண்டார்.- என்றுள்ளது.
0 comments:
Post a Comment