இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதற்கு ஐ.நாவின் பரிந்துரையை இலங்கை செயற்படுத்த வேண்டும். இவை இடம்பெற்றால் மட்டுமே இலங்கையுடன் சர்வதேச சமூகம் கொண்டுள்ள உறவு நீடிக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் தற்போது இடம்பெற்று வருகின்றது. இதில் இலங்கை தொடர்பாக தனது உத்தியோகபூர்வ அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் நேற்றுச் சமர்ப்பித்தார்.
அதனைத்தொடர்ந்து உறுப்பு நாடுகள், குறித்த அறிக்கை தொடர்பாக கருத்துத் தெரிவித்தன. இதன்போதே ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதி இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டினார். அவர் அங்கு தெரிவித்ததாவது,
இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாமல் உள்ளமை தொடர்பாக அதிக கரிசனை கொண்டுள்ளோம். பாதிக்கப்பட்டோருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் நிலைமாறுகால நீதி பொறிமுறையை தாமதமின்றி செயல்படுத்த வேண்டும்.
இவை குறிப்பிட்ட கால எல்லைக்குள் நிறைவேற்றப்படுவது அவசியம். அவ்வாறு இவ்விடயங்கள் செயற்படுத்தப்படும் பட்சத்தில் மாத்திரமே சர்வதேச சமூகம் இலங்கையுடன் இணைந்து செயற்படும் - என்றார்.
0 comments:
Post a Comment