வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது? என்பது குறித்து வரும் 5-ம் தேதி அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தேமுதிக அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. தேமுதிகவைப் பொறுத்தவரை அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுடனும் தொடர்ந்து பேசி வந்தது. ஆனால் தேமுதிக கேட்கும் தொகுதிகளை ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டதன் காரணமாக, தேமுதிகவைக் கூட்டணியில் சேர்க்கும் முயற்சியை திமுக கைவிட்டது.அதிமுக தரப்போடு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்த தருணத்தில் ஞாயிறன்று சமக தலைவர் சரத்குமார் தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது சாலிகிராமம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது அரசியல் தொடர்பான தனது கருத்துகளை விஜயகாந்திடம் கூறியதாகவும் சரத்குமார் கூறினார்.
இந்நிலையில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது? என்பது குறித்து வரும் 5-ம் தேதி அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தேமுதிக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தேமுதிக நிறுவனத் தலைவர், பொதுச் செயலாளர் விஜயகாந்த் தலைமையில் வரும் 5-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தேமுதிக தலைமைக் கழக நிர்வாகிகள், உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், தேமுதிக அணி செயலாளர்கள், துணை செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment