வவுனியா கனகராயன்குளம் பகுதியில் கணவனிடம் இருந்து பணத்தை வாங்கும் நோக்கில், பிள்ளையைக் கடத்தியதாகத் தெரிவித்து, கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் போலி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா, நெடுங்கேணி, பெரியமடுப் பகுதியில் வசித்து வந்த 8 வயதுடைய திரிபரஞ்சன் தமிழவன் என்ற சிறுவன் நேற்று மாலை காணாமல் போயுள்ளார். பாடசாலை சென்று வீடு திரும்பிய சிறுவன் தனது தாயாருடன் வகுப்புக்கு சென்று வீடு திரும்பியிருந்தார். பின்னர் தனது வீட்டிலிருந்து சுமார் 100 மீற்றர் தூரத்திலுள்ள தனது அப்பப்பா வீட்டிற்கு தோட்டத்தினுடாக சென்றிருந்தார்.
ஆஸ்ரேலியாவில் உள்ள தனது கணவருடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த தாயார் உரையாடி முடிந்த பின் சிறுவன் சென்ற வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சிறுவன் வரவில்லை என சிறுவனின் அப்பப்பா தெரிவித்துள்ளார். அதன்பின் இரவிரவாக உறவினர்கள் இணைந்து தோட்டம் மற்றும் தோட்டக் கிணறுகள் எல்லாம் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. இதன்பின் கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் தாயார் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த நிலையில், சிறுவனை சிறுவனின் தந்தை வெளிநாடு செல்ல காரணமான ஏஜென்சி கடத்தி வைத்திருப்பதாகவும் 35 இலட்சம் தந்தால் சிறுவனை விடுவிப்பதாகவும் தாயின் தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்திருந்ததுடன், கடத்தப்பட்ட சிறுவனும் தொலைபேசியில் பேசியுள்ளார். இதன்போது சிறுவன் தன்னை கூட்டிச் செல்லுமாறு தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். மீண்டும் பிறிதொரு தொலைபேசியில் இருந்து 35 இலட்சம் பணம் தருமாறு கோரி தாயாருக்கு அழைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த தொலைபேசி இலக்கங்களையும் பெற்றுக்கொண்ட கனகராயன்குளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதன்போதே வெளிநாட்டில் வாழும் கணவனிடம் இருந்து பணத்தைப் பெறும் நோக்கில் கனகராயன்குளம் பெரியமடுப் பகுதியில் உள்ள சகோதரி வீட்டில் மகனை மறைத்து வைத்திருந்த தாயார், பிள்ளையை கடத்தியவர்கள் 35 லட்சம் போருவதாக கணவனுக்குத் தகவல் வழங்கிய விடயம் தெரிய வந்துள்ளது. பொலிஸாரின் விசாரணையில் சிறுவன் கடத்தப்படவில்லை. குடும்பத்தவர்கள் வேண்டுமென்றே போலி முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
0 comments:
Post a Comment