யாழில் குடியேறியுள்ள சிங்கள மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அவற்றைத் தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம். இவ்வாறு ஐhதிக கெல உறுமயவின் தலைவரும் மேல்மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு நேற்று வருகை தந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க பல்வேறு இடங்களுக்கும் சென்று பல தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்ததுடன் அபிவிருத்தி தொடர்பான நிகழ்வுகளிலும் கலந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை யாழ்.நாவற்குழிப் பிரதேசத்திலுள்ள விகாரைக்குச் சென்று விசேட வழிபாடுகளில் ஈடுபட்டு விகாராதிபதி வராப்பிட்டியே கவம்பதி தேரரிடம் ஆசிகளையும் பெற்றிருந்தார். இதைத் தொடர்ந்து அங்கு குடியேறியுள்ள சிங்கள மக்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன் போது அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் தேவைகள் தொடர்பிலிலும் கேட்டறிந்தார். குறிப்பாக வீட்டுத் திட்டம் வழங்கப்படாமை, மின்சாரம் மற்றும் கல்வி துறை ரீதியில் பெரும் பிரச்சனைகளை எதிர்நோக்கி வருவதாக அந்த மக்கள் அமைச்சரிடம் முறையிட்டனர். அப்பகுதியில் பாடசாலை அமைப்பதன் அவசியம் குறித்தும் இதன் போது மக்கள் எடுத்துரைத்திருந்தனர். இதன்போது குடியேறியுள்ள சிங்கள மக்களும் பல குறைபாடுகளுடனே வாழ்ந்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் அமைச்சர்களுடனும் அரசுடனும் பேசவுள்ளதாகவும் அதனடிப்படையில் அவற்றைச் செய்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதே வேளை யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தற்போது மீளக் குடியேறி வருகின்றார்கள். அவ்வாறு குடியேறுகின்ற மக்களுக்குரிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. ஆகவே அவற்றை ஏற்படுத்திக் கொடுக்குமாறு வடக்கு ஆளுநரிடம் கேட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment