கடற்படையினரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி போராட்டத்தை கைவிடப் போவதில்லை என நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிலாவத்துறை மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடற்படையினரின் வெளியேற்றத்தை வலியுறுத்தி முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலாவத்துறை மக்கள் இன்று நான்காவது நாளாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இனந்தெரியாத நபர்களும், கடற்படையினரும் புகைப்படம் எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக போராட்டக்காரர்கள் நேற்று வெள்ளிக்கிழமை மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். அத்தோடு கடற்படையினர் தம்மை அச்சுறுத்தும் வகையில் செயற்படுவதால் தமது பாதுகாப்பை உறுதிபடுத்துமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, கடற்படையினரின் அச்சுறுத்தல் தொடர்ந்தாலும், கடற்படையினர் தங்கள் காணிகளிலிருந்து வெளியேறும் வரை தமது போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சிலாவத்துறை மக்களுக்குரிய 36 ஏக்கர் காணிகளில் தற்போது கடற்படையினர் தங்கள் முகாம்களை அமைத்துள்ளனர். சுமார் 218 இற்கு மேற்பட்ட மக்களின் காணிகள் அவ்வாறு கடற்படை வசமாக்கப்பட்டுள்ளது. எனவே, கடற்படை முகாமை மாற்றி குறித்த காணியை உரிய மக்களுக்கு வழங்க கோரி கடந்த புதன்கிழமை முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த முஸ்ஸீம் மக்களின் ஆர்ப்பாட்டத்திற்கு அங்குள்ள தமிழ் மக்களும், அருட்தந்தையர்களும் தொடர்ச்சியாக ஆதரவு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment