சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார் ஞானசார தேரர்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் கடூழியச் சிறைத்தண்டனையிலிருந்து நேற்று விடுவிக்கப்பட்டார். 

அவருக்கு விதிக்கப்பட்டிருந்த 6 மாத கால கடூழியச் சிறைத் தண்டனை 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டதால் அவர் விடுவிக்கப்பட்டார்.

நீதிமன்றை அவமதித்த குற்றத்துக்காக, ஹோமாகம நீதிவான் மன்று ஞானசார தேரருக்குக் கடந்த வருடம் விதித்த தண்டனையை நீக்குமாறுகோரி ஹோமாகம மேல் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

மனு மீதான விசாரணையின் பின்னர் மேற்குறித்த உத்தரவு நேற்றைய தினம் வழங்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொடவை ஹோமாகம நீதிவான் மன்றில் வைத்து ஞானசார தேரர் அச்சுறுத்தியிருந்தார். 

அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த விசாரணையின் பின்னர் தேரரைக் குற்றவாளியாகக் கண்ட நீதிவான் மன்று 6 மாதங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்திருந்தார். 

அவரை விடுவிக்குமாறு அவர் சார்பில் சட்டத்தரணிகள் ஹோமாகம மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்திருந்தனர். அதனை மன்று பரிசீலித்தது.

அது தொடர்பான கட்டளைக்காக மேல்நீதிமன்றில் நேற்று எடுக்கப்பட்டது. சிறைச்சாலை அலுவலர்கள் ஞானசாரதேரரை மேல்நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர்.

மனு மீதான தீர்ப்பை அறிவித்த மேல்நீதிமன்ற நீதிபதி அமல் திலகரத்ன, ஞானசார தேரருக்கு விதித்த சிறைத் தண்டனையை 5 வருடங்களுக்கு ஒத்திவைப்பதாகத் தெரிவித்தார்.

அவரை விடுவிக்குமாறு தெற்கில் சில அமைப்புகளும் சில அரசியல்வாதிகளும் போராட்டம் செய்திருந்தன. அரசதலைவரிடமும் கோரிக்கை விடுத்திருந்தன. இந்து அமைப்பு ஒன்றும் ஞானசாரரை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது.



Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment