இறுதிப் போரில் இராணுவத்தினர் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்- சந்திரிகா

இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, இராணுவத்தினர் போர்க்குற்றங்களைப் புரிந்துள்ளனர் என்பதை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் ஏற்றுக்கொண்டுள்ளார்.


“இறுதிப் போரின்போது இரு தரப்புக்களும் போர்க்குற்றங்களை இழைத்துள்ளார்கள்” இவ்வாறு சந்திரிகா குறிப்பிட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இதே கருத்தை தெரிவித்திருந்தார்.

சந்திரிகா மேலும் தெரிவித்ததாவது,

இறுதிப் போரின்போது இரு தரப்புக்களும் போர்க்குற்றங்களை இழைத்துள்ளார்கள். ஆனால், போர் நிறைவடைந்ததும் ஒரு தரப்பு மற்றைய தரப்பு மீது குற்றம் சுமத்தி வருகின்றது.

போர்க் குற்றச்சாட்டுக்களை இராணுவம் இழைத்துள்ளது என்பதை முன்னாள் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவே ஒத்துக் கொண்டுள்ளார். போர் வெற்றிக்குப் பிரதான பங்கு அவருடையது. எந்த விசாரணைக்கும் தயார் என்று அவர் கூறிக் கொண்டிருக்கின்றார்.

இந்த நிலைமையில், ராஜபக்ச குடும்பத்தினர் போர் வெற்றியை தமக்கானதாகக் கொண்டாடுகின்றார்கள்.

நாட்டில் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டாலும், சர்வதேச சமூகத்தினால், சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உண்மை நிலையைக் கண்டறியவேண்டும்.

அதற்காக போர் வெற்றியை பெற்றுத் தந்த இராணுவத்தினரை நீதிமன்றக் கூண்டில் ஏற்றுமாறு சொல்லவில்லை. அதேவேளை, உயிரிழந்த விடுதலைப் புலிப் போராளிகளுக்கு புத்துயிர் கொடுக்குமாறும் சொல்லவில்லை.

இரு தரப்புச் சண்டையிலும் பாதிக்கப்பட்டவர்கள் மக்கள். எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கவேண்டும். நாட்டின் நலன் கருதி, நாட்டின் ஒற்றுமை கருதி எல்லோரும் ஓரணியில் நின்று நீதியைக் காணவேண்டும் – என்றார்.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment