ஈழத்தமிழர்கள் இலங்கை சுதந்திரமடைந்த நாள் தொடக்கம் இன்று வரையில் தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்குட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் எம் மக்களும் காலாதிகாலமாக நீதி கேட்டுப் போராடிக் கொண்டிருக்கின்ற போதும் எமது மக்களின் போராட்டங்களை யாருமே கண்டுகொள்ளாத நிலையிலே விரக்தியின் விளிம்பில் நின்று இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி எமக்கான நீதியினை சர்வதேசம் பெற்றுத் தர வேண்டும் என்று இன்றைய நாளில் போராடிக்கொண்டிருக்கின்றார்கள்
இலங்கை ஐரோப்பியரின் காலணித்துவத்தில் இருந்து விடுபட்டு 71 ஆண்டுகள் பூர்த்தியாகின்ற போதும் ஈழத்தமிழர்களாகிய நாம் தொடர்ந்தும் காலணித்துவ ஆட்சி ஒன்றின் கீழே அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆண்ட பரம்பரையான நாம் அடங்கி ஒடுங்கிப்போய் இன்னொரு தேசத்தவரினால் அடக்கியாளப்படுவதை நாம் விரும்பவில்லை.
எமது மண்ணில் நாம் சுதந்திரமாக வாழ்வதற்கு எமது தாயக மண்ணில் இருந்து இராணுவம் வெளியேற்றப்படல் வேண்டும், மக்கள் தமது சொந்த நிலங்களில் குடியமர்த்தப்படல் வேண்டும், இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வகையிலான திட்டமிட்ட குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நிலை கண்டறியப்பட வேண்டும், நீண்டகாலமாக சிறையில்வாடும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், புலிகள் மீளுருவாக்கம் என்ற போர்வையில் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும், தமிழர் தாயகத்தில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்புக்கள் நிறுத்தப்பட வேண்டும், பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும். இத்தகைய அடிப்படையான அரசியல் பிரச்சனைகளிற்கு தீர்வுகாண சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
உலக ஒழுங்கில் சிறுபான்மை இனங்களை பெரும்பான்மை அரசுகளிடம் இருந்து காப்பாற்ற என பல சட்டங்கள் காலத்துக்கு காலம் இயற்றப்பட்டு வந்துள்ளன. அதன் ஆரம்பமாக 1949 ஆம் ஆண்டு ஜெனீவா தீர்மானம் 49 கொண்டுவரப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக பல்கன் குடியரசுகளை முன்நிறுத்தி 1992 ஆம் ஆண்டு ஐ.நாவின் பாதுகாப்பு சபை தீர்மானத்தில் 780 ஆவது தீர்மானம் கொண்டுவரப்பட்டிருந்தது. இந்த தீர்மானத்தின் படி இனச்சுத்திகரிப்பானது இனப்படுகொலையின் வரைமுறைகளுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.
அந்தவகையில் மேற்குறிப்பிட்ட தமிழ் மக்களிற்கு எதிரான அடக்குமுறைகள் என்பவை இனச்சுத்திகரிப்பாகவே அமைந்து காணப்படுகிறது. இத்தகைய இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையின் உச்சமே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஆகும்.
சர்வதேசம் தமிழ் மக்களின் போராட்டத்தின் நியாயத்தன்மையினை புரிந்து கொள்ளவேண்டும். இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் அடிப்படையான அரசியல் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் கரிசனை கொள்ளவில்லை. இத்தகையதொரு சூழ்நிலையில் சர்வதேச பொறிமுறை ஒன்றினூடாக இலங்கை விவகாரம் கையாளப்பட வேண்டும்.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இயற்றப்பட்ட 30/1 தீர்மானம் மற்றும் 34/1 தீர்மானத்தினம் மூலம் தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனிதத்துவதற்திற்கு எதிரான குற்றங்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என்பது நிருபணமாகியுள்ளது. எனவே கடுமையான தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டு அதன் மூலமாக வரலாற்று முன்னுதாரணங்களின் அடிப்படையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக அல்லது சர்வதேச விசேட குற்றவியல் தீர்ப்பாயம் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
இலங்கையில் ஆட்சிப்பீடம் ஏறும் எந்தவொரு அரசியல் தலைமையும் ஒற்றையாட்சிக் கட்டமைப்பிலும், சிங்கள பௌத்தத்திற்கான முன்னுரிமை என்பவற்றில் இருந்து விலகி ஒருபோதும் புதிய அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்கமாட்டார்கள் என்பது வரலாறு எமக்கு கற்றுத்தந்துள்ளது. ஆகவே தொடர்ந்தும் நாம் ஏமாறத்தயாரில்லை.
தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தப் போவதில்லை. ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் தேசமும் அதன் இறைமையும் அங்கீகரிக்கப்பட்டு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சமஸ்டித் தீர்வு அடையப்பட வேண்டும். இத்தகைய தீர்வானது சர்வதேச மத்தியஸ்தத்துடனே மேற்கொள்ளப்படல் வேண்டும்.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
0 comments:
Post a Comment