சாவகச்சேரி உணவக கொள்ளை ; சந்தேகநபரின் சகோதரனும் கைது

யாழ்ப்பாணம் சாவகச்சேரி உணவகத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

உணவகத்தில் 10 லட்சம் ரூபா கொள்ளையிட்ட சம்பவம் குறித்த   குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நபரின் சகோதரன் என்பதும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

முதலில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரினுடைய வாக்கு மூலத்துக்கமைய இரண்டாவது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் .

கைது செய்யயப்பட்டவரிடன் திருடப்பட்ட பணத்திலிருந்து புதிதாக வாங்கியதாகக் கருதப்படும் மோட்டார் சைக்கிள் மற்றும் பெறுமதியான பொருள்கள் என்பனவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

உணவகத்தில் திருடியவர் தொடர்பான விவரங்களை முகநூலில் பதிவுசெய்து, அது பற்றித் தகவல் கிடைத்ததால் முதல் சந்தேகநபர் பிடிபட்டார். 

அவரை, சாவகச்சேரியிலிருந்து முல்லைத்தீவுக்குச் சென்று மக்களின் உதவியுடன் பிடித்து சாவகச்சேரிக்குக் கொண்டு வந்து பொலிஸாரிடம் ஒப்படைத்தார் உணவக நடத்துநர்.

இந்தத் திருட்டு சாவகச்சேரி மருத்துவமனை அருகிலுள்ள உணவகமொன்றில் கடந்த ஜனவரி 8ஆம் திகதி இரவு இடம்பெற்றது.

ஓடு பிரித்து உள்நுழைந்த திருடன் கடையில் பொருத்தப்பட்டிருந்த மறைகாணிகளின் செயற்பாடுகளை நிறுத்திவிட்டு உணவகத்துக்குள் வைக்கப்பட்டிருந்த 7 லட்சம் ரூபா பணத்தையும் 3 லட்சம் ரூபா பெறுமதியான அலைபேசி மீள் நிரப்பு அட்டைகளையும் திருடிச் சென்றுள்ளார்.

அது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து தானும் விசாரணையில் இறங்கினார் கடை நடத்துநர்.

செயலிழக்காமல் இருந்த மறைகாணியின் உதவியுடன் அதற்கு முன்னைய நாள்களில் கடைக்கு வந்திருந்தவர்கள் தொடர்பாகப் பார்வையிட்டபோது முதல் நாளில் அங்கு உணவருந்த வந்திருந்தவரும் திருட்டின் போது செயற்பட்ட மறைகாணிப் பதிவில் காணப்பட்ட நபரும் ஒரே மாதிரியாக இருந்துள்ளார் என்பதை இயன்றளவு உறுதி செய்துகொண்டார்.

அப் படங்களை முகநூலில் பதிவு செய்து அவர் தொடர்பான விவரங்களைத் தமக்குத் தெரியப்படுத்துமாறும் இந்தத் தகவலை அனைவருக்கும் பகிருமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இப் பதிவைப் பார்த்த முல்லைத்தீவு உடையார் கட்டைச் சேர்ந்த ஒருவர் அங்குள்ள ஒருவர் பற்றிக் கடை உரிமையாளருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.

உணவக உரிமையாளர் நேற்றுமுன்தினம் சிலருடன் அங்கு சென்றபோது இவர்களைக் கண்டதும் சந்தேக நபர் அங்கிருந்து தப்பியோட முயற்சித்துள்ளார். பொதுமக்களின் உதவியுடன் அவர் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

அவரை வாகனத்தில் கொண்டு வந்து சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

பொலிஸார் இந்த நபரை உணவகத்துக்கு முன்பாக சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வைத்திருந்துவிட்டுக் கொண்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் இரண்டாவது சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.



Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment