2019 பெப்ரவரி 4ந் திகதி சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி இன்று காலை 10 மணிக்கு கிளிநொச்சியில் கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டார். அவரிடம் இப்போராட்டம் சம்பந்தமாக வினவியதில் பின்வருமாறு பதில் இறுத்தார்.
பிரித்தானியர் ஆட்சி காலத்திற்கு முன்பிருந்தே தனித் தனி இராச்சியங்களாக மொழி, கலை, பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றைப் பேணி வந்த இனக் குழுமங்களை பிரித்தானியர் தமது காலனியாதிக்கத்தின் போது நிர்வாக ரீதியாக ஒன்றிணைத்து தனி ஒரு நிர்வாக அலகாக உருவாக்கியமை ஆசியா மற்றும் ஆபிரிக்காவின் பல நாடுகளிலும் அடக்கு முறைகளுக்கு வழிவகுத்து உள்நாட்டு யுத்தங்களை ஏற்படுத்தியது. காலனியாதிக்கத்தின் கீழ் அடக்குமுறைகளுக்கும் வள சுரண்டல்களுக்கும் மத்தியில் வாழ்ந்த இந்த இனங்கள் பிரித்தானியர்கள் வெளியேறியபோது தமக்குச் சுதந்திரம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்துபோனார்கள்.
எமது கதையும் அது தான்.
1948 ஆம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட பின்னர் பிரித்தானியர்களின் ஆட்சியின் கீழ் இருந்ததை விட மோசமான அடக்கு முறைகளுக்கும், உரிமை மறுப்புகளுக்கும் நாம் உள்ளாக்கப்பட்டோம். அதனால் தான் இந்த அடக்கு முறைகளுக்கு எதிரான எமது எதிர்ப்பைக் காட்டும்பொருட்டு சுதந்திர தினத்தை கரி நாளாகக் கருதி எமது தமிழ் மக்கள் அகிம்ஸை முறையில் போராட்டங்களை இன்று நடத்திவருகின்றார்கள். சுதந்திரதினம் சுதந்திரம் பெற்ற மக்களாலேயே கொண்டாடப்படலாம். அடக்கு முறைகள் மத்தியில் வாழும் எம்மால் சுதந்திரம் கொண்டாடப்படுவது அழுத்தத்தின் பேரால் நடைபெறுவதாக அமையும். எம்மிடையே பத்து வருடங்களின் பின்னரும் பெருவாரியாக குடி கொண்டிருக்கும் இராணுவத்தினரின் பலவந்தத்தாலேயே நடைபெறுவதாக அமையும். இனியும் எமது மக்கள் தமக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாத ஒரு கட்டம் தற்பொழுது உருவாகியுள்ளது.
பிரித்தானியர்களின் காலனியாதிக்க செயற்பாடுகளினால் இவ்வாறு பாதிக்கப்பட்ட பல்வேறு இனக்குழுமங்களும் தமது சுதந்திர தினத்தை இவ்வாறு 'கரி நாளாக' பிரகடனப்படுத்தி இன்றும் போராட்டம் நடத்துவதை நாம் உலகில் பல இடங்களில் காண்கின்றோம். இது எம்மால் மட்டும் நடத்தப்படும் போராட்டம் அன்று. அடக்கு முறைகள், மக்கள் உரிமைகளை வழங்குவதில் அசமந்தப் போக்கு, ஆக்கிரமிப்பு போன்றவை எங்கெங்கு காணப்படுகின்றதோ அங்கெல்லாம் இவ்வகையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
எமக்கெதிரான இந்த அடக்குமுறை எதற்காக என்று வரலாற்று ரீதியாகப் பார்க்கின்றபோது, இலங்கையின் இறுதி இராச்சியமாக இருந்த கண்டி இராச்சியம் கி.பி 14 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 1815ம் ஆண்டு பெப்ரவரி மாதம்வரை தென்னிந்திய நாயக்க மன்னர்களால் ஆளப்பட்டுவந்தது. கண்டி இராச்சியத்தின் அரசுடமையைத் தம்வசம் வைத்திருக்கும் இராஜதந்திர நோக்குடன் நாயக்கர்கள் பலர் பௌத்தர்களாக மதம் மாறினர். பிரித்தானியர் இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர் மகாவம்ச கோட்பாடுகளுக்கு அமைய அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த நாயக்க வழித்தோன்றல்களான பல ஜனாதிபதிகளும் சிங்களத் தலைவர்களும் பதவி ஆசைக்காக இனவழி பாகுபாட்டில் இறங்கினர்.
இது சிங்கள- தமிழ் மக்களுக்கிடையே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிரிவினையை ஏற்படுத்தியது. இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடுவதற்கு வழி வகுத்தது. தொடர்ச்சியாக எமது மக்களுக்கு எதிராக இனப்படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளார்கள். எமது நிலங்கள் தொடர்ந்தும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. வளங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. எம்மை நாமே ஆளும் அதிகாரம் எம்மிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. பறித்தவற்றில் அதைத் தருகின்றோம் இதைத் தருகின்றோம் என்று பேரம் பேசுகின்றார்கள் அரசாங்கத்தினர். அரசாங்கத்தைக் கோபப்படுத்தாதீர் என்கின்றனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மெத்தப்படித்த நபர்கள்.
இன்றைய எமது இந்த நிலைமையினைச் சரியாகப் புரிந்துகொண்டு காணாமல் போன மக்களின் உறவினர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் 71 ஆவது இந்த சுதந்திர தினத்தை கரிநாளாகக் கருதி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நடவடிக்கை எம்மை நெகிழவைக்கும் நடவடிக்கை.
எம் மக்களுக்கு உற்சாகம் அளிக்கும் நடவடிக்கை. புத்துணர்வைத் தரும் போராட்டம். நம்பிக்கையை அளிக்கும் போராட்டம் என்று கூறினால் மிகையாகாது. இதுகாறும் இருந்த தமிழ்த் தலைமைகள் போல் அல்லாது எமது மக்கள் விழித்தெழுந்துள்ளார்கள் என்று தெரிய வருகின்றது.
முல்லைத்தீவு கேப்பாப்புலவிலும் இன்று சுதந்திர தினத்துக்கு எதிராகப் போராட்டம் நடைபெறுகின்றது. இன்றைய இந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருப்பதால் அங்கு நடைபெறும் போராட்டத்தில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. அதேவேளை, தமது காணிகளை இராணுவத்தினரிடம் இருந்து விடுவிப்பதற்காக கேப்பாப்புலவு மக்கள் தொடர்ச்சியாகப் பற்றுறுதியுடன் நடத்திவரும் போராட்டம் வியக்கத்தக்கது. அவர்களின் போராட்டம் நிச்சயம் வெற்றிபெறும். நான் அந்த மக்களுடன் தொடர்பில் இருந்துவருகின்றேன். நேற்றைய தினம் கூட அவர்களுள் முக்கியமான ஒருவர் வந்து என்னைச் சந்தித்தார். இன்னும் சில நாட்களில் நான் அங்கு சென்று அவர்களைச் சந்திக்க இருக்கின்றேன்.
மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட 34/1 தீர்மானம் எதிர்வரும் மார்ச் மாதத்தில் காலாவதி ஆகின்றது. இந்த 34/1 தீர்மானத்தில் 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நிறைவேற்றும் வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் வழங்கி இருந்தது. மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர் மார்ச் மாதம் ஆரம்பமாகும் போது இலங்கை விடயம் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்படவிருக்கின்றது. நீதிக்கான எமது போராட்டத்தில் இந்தத் தீர்மானம் முக்கியமானது. இந்த தீர்மானத்தை அரசாங்கம் நிறைவேற்றுவதற்கு தவறியுள்ள நிலையில் அரசாங்கம் மீது சர்வதேச அழுத்தத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவேண்டும்.
இந்த விடயத்தை ஐ.நா செயலாளர் நாயகத்துக்கு கொண்டுசென்று உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தும் காலம் வந்திருக்கின்றது. சுதந்திரமான சர்வதேச விசாரணை ஒன்றை நடத்தும் தகுதிவந்த சர்வதேச நீதிமன்ற பொறிமுறை ஒன்றினூடாக நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான காத்திரமான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழர் தரப்பு ஐ.நா பொதுச்சபையை வலியுறுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும். ஐ.நா பொதுச்சபையின் 60/147 தீர்மானத்தின்படி சர்வதேச நாடுகளுக்கு இருக்கின்ற கடப்பாட்டுக்கு அமைவாகவும் ஐ.நா சாசனத்தின் 74 ஆவது அத்தியாயத்தின் கீழ் உள்ள அதிகாரத்தின் கீழும் செயற்படுமாறு தமிழ் அரசியல் கட்சிகள் ஐ.நா செயலாளர் நாயகத்தை வலியுறுத்தும் தீர்மானம் ஒன்றை கூட்டாக சமர்ப்பிப்பது பொருத்தமானது. இது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை ஊடாக நடவடிக்கை எடுக்க இருக்கின்றேன். இது தொடர்பில் தம்பிமார் கஜேந்திர குமார், சுரேஷ் பிறேமச்சந்திரன், ஐங்கரநேசன் ஆகியோர் மற்றும் தங்கையார் அனந்தி சசிதரன் ஆகிய பலரின் கட்சிகளுடன் தொடர்புகொள்ள இருக்கின்றேன்.
எமது போராட்டங்கள் எமது மக்களுக்கு விடிவு காலத்தைத் தந்து, ஒற்றுமையைத் தந்து, உரிய நிவாரணங்களையும் பெற்றுத்தர வேண்டியே இன்று நாம் இணைந்துள்ளோம் என்று கூறினார் தமிழ் மக்கள் கூட்டணியின் ஸ்தாபகரும் செயலாளர் நாயகமும் ஆகிய நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்.
0 comments:
Post a Comment