இலங்கை இராணுவத்தினர் மீது சுமத்தப்படும், போர்க்குற்றச்சாட்டுக்களை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென மஹிந்த அணியின் நாடாளு மன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சோசலிச மக்கள் முன்னணியினர் நேற்றுக் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே வாசுதேவ நாணயக் கார இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“இராணுவ வீரர்களால் குற்றங்கள் இடம்பெற்றிருந்தால் அதனை எமது நாட்டுச் சட்டத்திற்கு அமைய, விசாரணை செய்யலாம். அதைவிடுத்து சர்வதேச நீதிமன்றம், சர்வதேச விசாரணை என்று மீண்டும் கோருவது அர்த்தமற்றது.
அடுத்த மாதம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளன.
இந்த சந்தர்ப்பத்தில், வடக்கு, கிழக்கின் தமிழ் அரசியல்வாதிகள் இலங்கை இராணுவத்துக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை தெரிவிப்பார்கள். இது வழமை யான ஒன்றுதான். அதுமாத்திரமன்றி பேரவை முடிந்தவுடன் அது தொடர்பில் வாய்கூடத் திறக்கமாட்டார்கள்.
உண்மையில் போரினால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற தேவை இவர்களுக்கு இல்லை. வெறுமனே அரசியல் நோக்கத்திற்காகவே செயற்படுகின்றனர்” என வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment