போர்க் குற்றம் என்பது பொய்ப் பரப்புரை - தயா ரத்னாயக்க

30 வருட போர்க்காலத்தில் முப்படையினரால் போர்க் குற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை. போர்க் குற்றம் நிகழ்ந்தது என்பதை ஏற்க இயலாது. அது பொய்ப் பரப்புரை இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர்  தெரிவித்ததாவது:

கடந்த மூன்று, நான்கு வருடங்களில் எம் முப்படையின் அதிகாரிகள்,  சிப்பாய்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்படும் நிலமைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 

இரு  சிப்பாய்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடற்படை மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த ஐவருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

ஊடகங்களின் அண்மைய தகவல்களின் பிரகாரம், முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரணாகொடவை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும்  தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கடற்படைத்தளபதி கரணாகொட என்பவர் உலகின் முக்கிய பயங்கரவாத இயகத்தை இல்லாதொழிப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர். பலரால் முடியாது என்று கைவிடப்பட்ட விடயத்தை கையிலெடுத்து கடற்படைக்கு தலைமைதாங்கி பயங்கரவாதத்தை ஒழித்து இந்த நாட்டில் அமைதி நிலைநாட்டப்படுவதற்கு காரணமாக இருந்தவராகின்றார். 

முன்னாள் இராணுவப்படையின் பிரதானியைக் கைது செய்கின்றனர். முப்படைகளின் தலைமையை கைது செய்யவதற்கு முயற்சிக்கின்றார்கள். இது மேலும் தொடர்வதற்கு இடமளிக்காது ஜனாதிபதி  உடனடியாக தலையீடுசெய்து பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும்.

போர்க் குற்றங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறுவது தொடர்பில் நாம் தெளிவான விடயங்களை கூறவேண்டியுள்ளது. 

போர் நிறைவுக்கு வந்த காலம் முதல் குறுகிய அரசியல் இலாபத்திற்காக அவர் உள்ளிட்டவர்கள் முப்படையின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு எதிராக இவ்வாறான குற்றசாட்டுக்களை அடுக்கிக்கொண்டு வருகின்றார்கள். போர்க் குற்றம் என்பது சாதாரணமாக ஒரு சிப்பாய் செய்கின்ற விடயம் அல்ல.

குழுவாக முன்னெடுக்கப்படும் விடயமாகும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறான எந்தவொரு சம்பவங்களும் நடைபெறவில்லை. அவ்வாறானவற்றை நாம் காணவுமில்லை. இவ்வாறான நிலையில் போர்க் குற்றம் நிகழ்ந்தது என்பதை ஏற்க இயலாது. அது பொய்ப் பரப்புரை-என்றார்.

Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment