இராணுவம் போர்க்குற்றமிழைத்ததை உத்தியோகபூர்வமாக 10 வருடங்களின் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
போரின் போது தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் இராணுவத்தினர் என இருதரப்பினரும் போர்க்குற்றங்களை இழைத்துள்ளனர் என்று நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் முன்னணி மாநாடு நல்லூரில் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்தார்.
'போரில் இராணுவ வீரர்கள் எந்தக் குற்றங்களையும் இழைக்கவில்லை, அவர்கள் மனிதாபிமானப் போரையே நடத்தினர் என்று இதுவரை காலம் இலங்கை அரசு கூறிவந்தது.
எனினும் முதன்முறையாக நாட்டின் பிரதமர், இராணுவத்தினரும் போர்க் குற்றங்களை இழைத்தனர் என்ற உண்மையை உத்தியோகபூர்வமாகவும் பகிரங்கமாகவும் தெரிவித்துள்ளார். இதனை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள 10 ஆண்டுகள் எடுத்துள்ளது. தற்போது இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு என்ன உணர்வு ஏற்பட்டதோ தெரியவில்லை. அவருக்கு குற்ற உணர்வு ஏற்பட்டதோ? சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளதால் உண்மையை ஒத்துக்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டதோ தெரியவில்லை.
போர் முடிவடைந்து அடுத்த வருடமே ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் பல நாடுகள் இணைந்து இலங்கை அரசு பயங்கரவாதத்தை தோற்கடித்ததற்கு பாராட்டுத் தெரிவித்திருந்தது. ஆனால் இன்று இலங்கை அரசு தனது இராணுவமும் போர்க்குற்றங்களை இழைத்தது என்ற உண்மையை ஏற்றுக்கொண்டுள்ளது.' என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment