வீர மகனைப் பெற்றேன் அபிநந்தனின் தந்தை பெருமிதம்!




பாகிஸ்தான் பிடியில் உள்ள இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன்  திருவண்ணாமலை மாவட்டம், திருப்பனமூரைச் சேர்ந்தவர்.  அவரைப் பற்றி  அவரது தந்தை வர்த்தமான், வீர மகனைப் பெற்றேன் என்று பெருமிதத்துடன் கூறியுள்ளளார். 

அபிநந்தனின் பெற்றோர் சென்னை  சேலையூரை அடுத்த மாடம்பாக்கத்தில் வசித்து வருகின்றனர்.

தாம்பரம் விமானப்படை மையத்தில் பயிற்சி பெற்ற அபிநந்தன் கடந்த 2004 முதல் இந்திய விமானப்படையில் பணியாற்றி வருகிறார். தற்போது பாகிஸ்தான் பிடியில் சிக்கியுள்ள அபிநந்தனின்  நிலை குறித்து உறவினர்கள் கவலையடைந்துள்ளனர். அவரைப் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஜம்மு காஷ்மீரில்  எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. கடந்த செவ்வாய்க்கிழமை இந்திய விமானப்படை விமானங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாம்களை தகர்த்தெறிந்தன. இந்த தாக்குதலில் பயங்கரவாத முகாம் அழிக்கப்பட்டது.

அதன் பின்னர் எல்லையில் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில் பாகிஸ்தான் எல்லையில் நுழைந்த இந்தியாவின் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், விமானி ஒருவரைப் பிடித்து வைத்திருப்பதாகவும் பாகிஸ்தான் தெரிவித்திருந்த நிலையில் விமானி அபிநந்தன் மாயமானதாக இந்திய தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.  பாகிஸ்தான் பிடியில் விமானி அபிநந்தன் உள்ளது உண்மைதான் என்று  வெளியுறவுத்துறையும்  உறுதிப்படுத்தியுள்ளது.

அபிநந்தன்  தந்தை ஏர்மார்ஷல் எஸ்.வர்த்தமான் கிழக்கு பிராந்திய விமானப்படை ஏர் ஆபீசர் கமாண்டிங் இன் சீப் ஆக ஷில்லாங்கில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மிராஜ் 2000 போர் விமானத்தை மேம்படுத்துவதில் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.

அவரது தாயார் மல்லிகா. இவரும் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கம் திருமலை நகர் ஜல்வாயு விஹார் விமானப்படை குடியிருப்பில் வசித்து வருகின்றனர். வர்த்தமான் இந்திய விமானப்படை அதிகாரிகள் சங்கத்தின் தமிழ்நாடு கிளை தலைவராகவும் உள்ளார்.  சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகில் உள்ள வெம்பாக்கத்தை அடுத்த திருப்பனமூர். 

அபிநந்தனுக்கு ஒரு சகோதரி உண்டு. அபிநந்தன் தனது பள்ளிப்படிப்பை அமராவதி சைனிக் பள்ளியில் நிறைவு செய்து விட்டு, தாம்பரம் விமானப்படை பயிற்சி தளத்தில் பயிற்சி பெற்று இந்திய விமானப்படையில் விங் கமாண்டராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தில்லி விமானப்படை குடியிருப்பில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

அபிநந்தன் குறித்து அவரது தந்தையிடம் கேட்டபோது, வீரமகனைப் பெற்று இருக்கிறோம். அந்த பெருமையுடன் எதற்கும் கலங்காமல் இருந்து வருகிறோம் என்று கூறினார்.

அபிநந்தனின் தாய், தந்தையை பா.ஜ.க.  மாநிலத் தலைவர் தமிழிசை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன், தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா,சென்னை காவல்துறை ஆணையர் விசுவநாதன் ஆகியோரும் அபிநந்தனின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

விமானி அபிநந்தனின் பெற்றோர் வசித்து வரும் ஜல்வாயு விகார் குடியிருப்பைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
அபிநந்தனை பத்திரமாக மீட்க வேண்டும் : சொந்த கிராம மக்கள் கோரிக்கை

பாகிஸ்தான் பிடியில் சிக்கிய இந்திய விமானி அபிநந்தனை பத்திரமாக மீட்க வேண்டும் என்று, அவரது உறவினர்கள், சொந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அபிநந்தனின் சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்துள்ள திருப்பனமூர். அங்கு வசிக்கும் அவரது உறவினர் கவுத்தி தேவகுமார் உள்பட பலர் அவரை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அபிநந்தனின் தாத்தா சிம்மகுட்டி இந்திய விமானப் படை விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியராக இருந்துள்ளார். அவரது தந்தை வர்தமான் பிரான்ஸ் நாட்டில் விமானியாக வேலை பார்த்துவிட்டு, பின்னர் இந்திய ராணுவத்தில் விமானியாக பணியாற்றினார்.

இவரைத் தொடர்ந்து அபிநந்தனும் இந்திய விமானப் படையில் விமானியாக
சேர்ந்தார். அபிநந்தனின் குடும்பத்தினர் 3 தலைமுறைகளாக விமானப் படையில் விமானிகளாக இருந்து நாட்டுக்கு சேவை செய்து வருகின்றனர் என்றும், அபிநந்தனின் தாய், தந்தை மற்றும் குடும்பத்தினர் சென்னையில் வசித்து வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment