இனப்படுகொலையை மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கு இடமில்லை. தமிழ் மக்களும் அதற்குத் தயாராக இல்லை. யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். தமிழ் மக்களுக்கு நீதி நியாயயம் கிடைக்க வேண்டும். இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் கூறிய மறப்போம் மன்னிப்போம் என்ற கருத்தை கூட்மைப்பினரும் ஏற்றுக் கொண்டு வரவேற்பதானது தமிழ் மக்களின் மனங்களை நோகடிக்கக்கூடிய செயலாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கிற்கு பயணம் செய்த பிரதமர் ரணில்விக்கிரமசிங்க மறப்போம் மன்னிப்போம் எனக் கூறிய கருத்து தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,
துமிழ் மக்களுக்கான எல்லாவற்றையும் கைவிட்டிருக்கும் கூட்டமைப்பு தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருப்பது போன்று யுத்தக் குற்றங்களையும்ம் கைவிட்டு விசாரணைகளையும்; கைவிட்டு மறப்போம் மன்னிப்போம் என்ற நிலைக்கு வந்திருப்பது தமிழ் மக்களுக்கான சாபக்கேடு.
யுத்தத்தில் யுத்தக் குற்றங்கள் பல நிகழ்த்தப்பட்டிருக்கின்றது. மனித உரிமை மீறல்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றது. பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் போயிருக்கின்றார்கள். இது தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இரண்டு தீர்மானங்ளும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
அத் தீர்மானத்தை நிறைவேற்ற நான்கு வருட கால அவகாசம் கொடுத்தும் இதுவரையில் பெரியதாக எதுவும் நடக்கவில்லை என்ற விடயமும் இருக்கின்றது.
அதனை செய்ய முடியாத பிரதமர் எல்லாவற்றையும் மறப்போம் மன்னிப்போம் தொடர்ந்தும் நாங்கள் இந்த விடயஙக்ளை இவ்வாறு இழுத்துக் கொண்டு செல்ல முடியாது என்ற பாணியில் சில கருத்துக்களைச் சொல்லியிருக்கின்றார்.
பல எண்ணிக்கையில் மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா அறிக்கைகள் சொல்கின்றன. குறிப்பாக வைத்தியசாலைகள் மீது குண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன.
பாதுகாப்பு வலயங்களை உருவாக்கி மக்களை அங்கு செல்லுமாறு கூறி பல ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு வைத்து கொல்லப்பட்டிருக்கின்றார்கள். பால்மா வாங்குவதற்காக வரிசையில் நின்ற சிறுவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.
இவ்வாறு பல சம்பவங்கள் யுத்தக் குற்றங்களாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. மோசமான முறையில் கொலை செய்யப்பட்ட மக்களுக்கு விசாரணை வேண்டும். எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு இலங்கை அரசு தயாராக இல்லை.
காணாமற்போனோர் தொடர்பிலும் அரசு எந்தவித நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் ஆயிரக்கணக்கில் இருக்க விசாரணைகளை நடாத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதைச் சொல்வதற்குக் கூட தயாரில்லாமல் மறப்போம் மன்னிப்போம் என்று சொன்னால் இதனை எந்த அடிப்படையில் கூறுகிறார் என்று கேட்கின்றோம்.
பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொலை செய்து பல ஆயிரக்கணக்கானோரை கடத்திச் சென்று அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்ற சூழ் நிலையில் அவற்றுக்கான நீதியை நிலைநாட்டாமல் அந்த மக்களுக்கான நீதியை நியாயத்தைப் பெற்றுக் கொடுக்காமல் எவ்வாறு பிரதமர் இதனைக் கூற முடியும்.
யாருக்கும் மரண தண்டணை கொடுங்கள் என்று நாங்கள் சொல்லவில்லை. மாறாக இவை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்றே கோருகின்றொம் அதனை விடுத்து எல்லாவற்றையும் மறப்போம் மன்னிப்போம் என்று சொன்னால் உண்மையாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நியாயத்தைக் கொடுக்க பிரதம மந்திரிக்கு விருப்பம் இல்லை. என்றார்.
0 comments:
Post a Comment