ஐ.நாவில் இலங்கைக்கு ஆப்பு - அடித்துக் கூறும் மகிந்த

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் மார்ச் மாதக் கூட்டத் தொடரில் இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் இம்முறை மேலும் அதிகரிக்கும். அதற்கான வேலைத்திட்டங்களை முத்தரப்பு நாடுகளுடன் இணைந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சகாக்களான சம்பந்தன் – சுமந்திரன் தலைமையிலான குழுவினர் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.

இந்தியாவுக்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் அங்குள்ள ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் தெரிவித்ததாவது,

இலங்கைக்கு எதிரான ஐ.நாவின் போர்க்குற்றத் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கி வரலாற்றுத் துரோகம் செய்தது ரணில் அரசு.

இம்முறையும் இலங்கைக்கு எதிராக புதிய தீர்மானம் நிறைவேற்றப்படும். அதற்கும் ரணில் அரசு வெட்கம் இல்லாமல் ஆதரவு வழங்கும்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உறுப்புரிமை நாடுகளின் பட்டியலில் இருந்து அமெரிக்கா வெளியேறியுள்ள நிலையில், பிரிட்டன், ஜேர்மனி, கனடா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து இலங்கைக்கு எதிரான புதிய தீர்மானத்தைத் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

அந்த நாடுகளின் இராஜதந்திரிகள் கொழும்பில் தங்கியிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். கூட்டமைப்பினரும் தமது நிகழ்ச்சி நிரலை அவர்களிடம் கையளித்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

ரணில் அரசு இதை அறிந்தும் அமைதி காக்கின்றது. போர்க்குற்றத் தீர்மானத்தை எம் மீதும் எமது படையினர் மீதும் திருப்பிவிட்டு தாம் தப்பித்துக்கொள்ள ரணில் அரசு முயல்கின்றது.

ஆனால், ஐ.நாவின் எந்தத் தீர்மானங்களைக் கண்டும் நாம் அஞ்சமாட்டோம். தீர்மானங்களை இலங்கையில் நடைமுறைப்படுத்தவும் விடமாட்டோம்-என்றார்.



Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment