பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என நியூசிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.
நேப்பியர் மைதானத்தில் இன்று நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய பங்களாதேஷ் அணி, 48.5 ஓவர்கள் நிறைவில் 232 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக மொஹமட் மிதுன் 62 ஓட்டங்களையும், மொஹமட் செய்பூதீன் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் ட்ரென்ட் போல்ட் மற்றும் மிட்செல் சான்ட்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், லொக்கி பெர்குசன் மற்றும் மெட் ஹென்ரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 233 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நியூசிலாந்து அணி, 44.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக மார்டின் கப்டில் ஆட்டமிழக்காது 117 ஓட்டங்களையும், ரோஸ் டெய்லர் ஆட்டமிழக்காது 45 ஓட்டங்களையும், ஹென்ரி நிக்கோல்ஸ் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் மெயிடி ஹசன் மற்றும் மொஹமதுல்லா ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இப் போட்டியின் ஆட்டநாயகனாக சதம் விளாசிய நியூசிலாந்து வீரர் மார்டின் கப்டில் தெரிவுசெய்யப்பட்டார். இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, நாளை மறுதினம் கிறிஸ் சேர்ச் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
0 comments:
Post a Comment