விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் ,சிறு குறு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் தொடங்கி வைத்துள்ளார்.
நாடாளுமன்ற பாதீட்டு கூட்டத் தொடரின்போது, மத்திய பாஜக கூட்டணி அரசு அண்மையில் இடைக்கால பாதீட்டை தாக்கல் செய்தது. அதில் ரூ.75,000 கோடி செலவில் 12 கோடி சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 உதவித் தொகை அளிக்கும் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
அந்த அறிவிப்பில் இந்தாண்டில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தலா ரூ.2,000 விதம், 3 தவணைகளாக ரூ.6,000 வரவு வைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன்படி உத்தரப் பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட 14 மாநிலங்களைச் சேர்ந்த 1 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு முதல் தவணைத் தொகை இன்று கையளிக்கப்பட்டது. 28 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மேலும் ஒரு கோடி விவசாயிகளுக்கு, 2 அல்லது 3 நாள்களில், முதல் தவணையாக ரூ.2,000 அளிக்கப்பட்டது.
இந்த தொகை அனைத்தும், சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்த பயனாளிகள் குறித்த பட்டியல், மத்திய அரசின் இணையதளத்தில் மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளால் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது.
விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கும் இந்த திட்டத்தில் யாராவது அரசியல் செய்ய நினைத்தால், விவசாயிகளின் சாபம் உங்கள் அரசியல் வாழ்க்கையை அழித்துவிடும். நான் விவசாயிகளிடம் ஒரேயொரு கோரிக்கையை முன்வைக்கிறேன். யாராலும் தவறான வழிநடத்தலுக்கு உள்ளாகாதீர்கள் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment