தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனே மின்சாரம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!
தமிழக அரசால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை, சில நிபந்தனைகளுடன் மீண்டும் திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதனையடுத்து ஆலையைத் திறக்கவும், மின்சாரம் வழங்கவும் அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் தமிழக அரசுக்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை.
இதையடுத்து ஆலையைத் திறக்க உத்தரவிடக் கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டும், ஆலையை திறக்க உத்தரவிடுவதற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்து வருவதாக வேதாந்தா நிறுவனம் கூறியிருந்தது.
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வேதாந்தா நிறுவனம் சார்பில் தங்கள் தரப்பு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஆலை பராமரிப்பு மற்றும் நிர்வாக ரீதியிலான பணிகளுக்கு மட்டுமே ஆலையை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
0 comments:
Post a Comment