தள்ளுவண்டி கடை நடத்தி லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஊர்வசி!
இந்தியாவில் ஆசிரியர் பணியை துறந்துவிட்டு குடும்ப சூழலால் ரெஸ்டாரண்ட் கடை நடத்தி ஆண்டுக்கு 8 லட்சம் வரை சம்பாதித்து சாதித்துள்ளார் ஊர்வசி. இந்தியாவின் வடமாநில பகுதியான குர்கான் என்ற இடத்தில் வசித்து வருபவர் ஊர்வசியாதவ். 35 வயதான அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
2016 ஆம் ஆண்டு ஊர்வசியின் கணவர் விபத்தில் சிக்கி காலில் காயம் ஏற்பட்டு வேலை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். ஊர்வசி பள்ளியில் ஆசிரியராக இருந்து 13,000 சம்பளம் பெற்று வந்துள்ளார். ஆனால் அது தனது கணவனின் மருத்துவ செலவிற்கும், குடும்ப சூழலுக்கும் போதிய அளவில் இல்லாததால் தான் மாற்று வழி கண்டடைய வேண்டும் என்ற முனைப்பில், நண்பர்களின் அறிவுறுத்தலில் ஒரு ரெஸ்டோரன்ட் துவங்கி உள்ளார்.
ஆனால் அதில் இழப்பு ஏற்பட்டதால் 6 மாதத்திற்குள் மூடப்பட்டுள்ளது.ஊர்வசி யாதவ் பின் குர்கான் தெருவில் 25,000 செலவில் சோலே குல்சே உணவு பொருள் விற்பனை செய்யும் தள்ளுவண்டி கடை ஒன்றை துவங்கி உள்ளார். ஆரம்பத்தில் தெருக்களில் தள்ளி சென்ற அவர் தற்போது அனைத்து விதமான அனுமதியும் பெற்று அந்த தெருவில் கடை நடத்தி வருகிறார்.
தெளிவான ஆங்கில புலமையும், நாகரிகமான உடையும் அணிந்து விற்பனையாளராக வலம் வருகிறார் ஊர்வசி இது குறித்து ஊர்வசி பேசுகையில் நாளொன்றுக்கு 500-லிருந்து 600-வரை செலவு செய்யும் அவருக்கு, முடிவில் 2000 முதல் 2500 வரை லாபம் கிடைப்பதாகவும், வருடம் ஒன்றுக்கு 8 லட்சம் வரை லாபம் ஈட்ட முடிகிறது என்றும் கூறினார். மேலும் ஊர்வசியின் கணவரின் உடல் தற்போது நலம் பெற்றுள்ளதால் அவரும் தொடர்ந்து உதவி செய்து, கடையை நல்ல முறையில் நடத்தி வருவதாகவும், காலை 10 மணி முதல் மாலை 4:30 மணி வரை மட்டும் கடையை நடத்திவிட்டு மற்ற நேரத்தில் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் மத்தியில் ஆசிரியர் பணியை துறந்து சிறு வியாபாரியாக வலம் வரும் ஊர்வசி அனைத்து பெண்களிற்கும் எடுத்துக்காட்டு தான்.
0 comments:
Post a Comment